வருமான வரித்துறை வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரான விஷால் 

 

வருமான வரித்துறை வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரான விஷால் 

வருமான வரித்துறை வழக்கில் நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி விளக்கமளித்தார். 

சென்னை: வருமான வரித்துறை வழக்கில் நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி விளக்கமளித்தார். 

நடிகர் விஷால் சென்னையில் சொந்தமாக ஃபிலிம் ஃபேக்டரி என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.அங்குள்ள ஊழியர்களுக்குக் கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்பட்ட ஊதியத்தில், பிடித்தம் செய்யப்பட்ட வரியை, வருமான வரித்துறைக்கு நடிகர் விஷால் முறையாகச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் இது குறித்து வருமான வரித்துறை அவருக்குப் பலமுறை சம்மன் அனுப்பியும் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில் வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் விஷால் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கடந்த 2 ந் தேதி விஷாலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகாததால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று நடிகர் விஷால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், நீதிபதி மலர் மதி முன்பு நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது ஆங்கிலத்தில் பேசிய விஷாலை, நீதிபதி தமிழில் வாதிடுமாறு வலியுறுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் விஷால் ரூ.4 கோடி கட்டினால் வரி ஏய்ப்பு வழக்கை முடித்து வைக்கலாம் என்று கூறி நீதிபதி மலர்மதி இந்த வழக்கை அடுத்த மாதம் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளர்.