வருமானம் அதிகரித்தும் பலன் இல்லை……தொடர் நஷ்டத்தில் யூகோ வங்கி……

 

வருமானம் அதிகரித்தும் பலன் இல்லை……தொடர் நஷ்டத்தில் யூகோ வங்கி……

பொதுத்துறை வங்கியான யூகோ வங்கி கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.891.98 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. இருப்பினும், இது சென்ற ஆண்டின் இதே காலாண்டை காட்டிலும் குறைவாகும்.

2019 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் யூகோ வங்கி ரூ.891.98 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. 2018 செப்டம்பர் காலாண்டில் யூகோ வங்கி ரூ.1,136 கோடியை இழப்பாக சந்தித்து இருந்தது. ஆக, கடந்த காலாண்டில் யூகோ வங்கியின் இழப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கடந்த ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும் போது யூகோ வங்கியின் நிகர நஷ்டம் அதிகரித்துள்ளது. யூகோ வங்கி  2019 ஜூன் காலாண்டில் ரூ.601.45 கோடியை மட்டுமே இழப்பாக சந்தித்து இருந்தது.

யூகோ வங்கி

கடந்த செப்டம்பர் காலாண்டில் யூகோ வங்கியின் மொத்த வருவாய் ரூ.4,533.51 கோடியாக உயர்ந்துள்ளது. 2018 செப்டம்பர் காலாண்டில் யூகோ வங்கி ரூ.3,749.18 கோடி வருவாய் ஈட்டி இருந்தது. 2019 செப்டம்பர் இறுதி நிலவரப்படி, யூகோ வங்கியின் மொத்த வாராக் கடன் 21.87 சதவீதமாக குறைந்துள்ளது. 2018 செப்டம்பர் இறுதியில் அது 25.37 சதவீதமாக இருந்தது. 

யூகோ வங்கி கிளை

யூகோ வங்கியின் நிகர வாராக் கடனும் குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் இறுதி நிலவரப்படி, யூகோ வங்கியின் நிகர வாராக் கடன் 7.32 சதவீதமாக குறைந்தது. 2018 செப்டம்பர் இறுதியில் அது 11.97 சதவீதமாக உயர்ந்து இருந்தது. நேற்று மும்பை பங்குச் சந்தையில் யூகோ வங்கி பங்கு விலை 3.64 சதவீதம் அதிகரித்து ரூ.14.23ஆக உயர்ந்தது.