வரலட்சுமி விரதம் : சகல சௌபாக்கியங்களை தருகின்ற விரதம்

 

வரலட்சுமி விரதம் : சகல சௌபாக்கியங்களை தருகின்ற விரதம்

திருமாலின் துணைவியான மகாலட்சுமி வரங்களை அள்ளித் தருவதால் வரலட்சுமி என அழைக்கப்படுகிறாள்.அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன் மனதார தியானித்து,அவளைச் சரணடைய வேண்டிய நாள் இந்த நாளாகும். 

பெண்கள் கடைபிடிக்க வேண்டிய மிக சிறப்பான விரதம் வரலட்சுமி விரதமாகும். சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று கடைபிடிக்கவேண்டும்.

vara

இந்நாளில் தான் ஆதிசங்கரர் தனக்கு நெல்லிக்கனியை பிட்சையாக‌ அளித்த பெண்மணிக்காக கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமியருளுடன் தங்க நெல்லிக்கனிகளை மழையாக பொழியச் செய்தார்.

மேலும் கிருஷ்ணரை காண்பதற்கு ஏழை குசேலன் வந்த வேளையில், மகாலட்சுமி தனது கடைக்கண் பார்வையினை குசேலன் வ‌சித்த ஊர் இருந்த திசை நோக்கி திரும்பினாள்,அதனால் அந்த ஊரே செல்வத்தால் நிறைந்தது.

 

varavafg

இந்த தினத்தில்தான் மாலை வேளையில் லட்சுமி பாற்கடலில் தோன்றினாள் என்பது நம் முன்னோர்கள் கூற்று. இத்தனை பெருமைகள் நிறைந்த இந்நாளில் காலையில் உபவாசத்துடன் பூஜை அறையை இயன்ற அளவு அலங்கரித்து கோலமிட்டு,கலசத்தில் லட்சுமியை ஆவாகணம் செய்து எலுமிச்சம்பழம், புஷ்பங்கள் சாத்தி இனிப்பு பண்டங்களைப் படைத்து, நெய் விளக்கு ஏற்றி,மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களைப் பாடித் தியானிக்கலாம். 

 

varakjj

மங்களகரமான மஞ்சள் கயிற்றை ஒன்பது முடிச்சுக்களுடன் பூஜையில் வைத்து வழிபாடு செய்து முடிந்தபின் அதனை எடுத்து வலது மணிக்கட்டில் விரதம் மேற்கொள்ளுபவர் கட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் குடும்பத்தினருக்கும்,நெருங்கிய உறவினர்களுக்கும் இந்த கயிற்றினை கொடுத்து வாழிபாடு மேற்கொள்ள வேண்டும்.வரலட்சுமியின் பூஜையை அனுஷ்டித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது.

எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.

varah

வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கை.லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கை கூடும்.எட்டுவிதச் செல்வங்களை தருவதுடன் தாலி பாக்கியத்தையும் வரட்சுமி வழங்குகிறாள். 

இதனால் தான் மணமான பெண்கள் இந்த தினத்தில் மகாலட்சுமியை போற்ற இவ்விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.