வண்டி நிறைய இளநீர்; கொடுத்து பழக்கப்பட்டவர்கள் என இன்னலிலும் நிரூபித்த டெல்டா விவசாயிகள்

 

வண்டி நிறைய இளநீர்; கொடுத்து பழக்கப்பட்டவர்கள் என இன்னலிலும் நிரூபித்த டெல்டா விவசாயிகள்

கடும் சிரமத்தில் இருந்தாலும் கொடுப்பதை மட்டும் நிறுத்தவே மாட்டோம் நாங்கள் கொடுத்து பழகியவர்கள் என டெல்டாவாசிகள் மீண்டும் ஒருமுறை சத்தமாக இந்த சமூகத்தின் கன்னத்தில் அறைந்து கூறியிருக்கிறார்கள்

தஞ்சாவூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு உதவி பொருட்கள் அனுப்பிய திருச்சி மாணவ மாணவிகளுக்கு டெல்டா விவசாயிகள் வண்டி நிறைய இளநீர் அனுப்பியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஜா புயல் நாகப்பட்டினம் – வேதாரண்யம் இடையே கடந்த 16-ம் தேதி கரையை கடந்தது. அப்போது மணிக்கு 100 கி.மீக்கும் அதிகமாக  சூறைக்காற்று வீசியதால் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்கள், வாழை மரங்கள், பயிர்கள் உள்ளிட்டவைகள் முற்றிலும் அழிந்துவிட்டது. இதனால் அந்த பகுதி மக்களின் ஒரு தலைமுறை உழைப்பு ஒரே இரவில் சின்னாபின்னாமானது. மேலும் அவர்களின் வாழ்வாதாரம் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பின்னோக்கி சென்றுள்ளது.

மேற்கூறிய மாவட்டங்களில் பல கிராமங்கள் தண்ணீர், உணவு, மின்சாரம் என அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தொலைதொடர்பும் துண்டிக்கப்பட்டு தனித்தீவாக இருக்கின்றன. அரசு அதிகாரிகள் மீட்பு பணிகளுக்கு வரவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஊடகங்களும் டெல்டா மாவட்டங்களின் நகரப்பகுதிகளை மட்டுமே கண்டுகொள்கின்றன சுற்றி உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களையும், உள் கிராமங்களையும் கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

delta

இதனையடுத்து தன்னார்வலர்கள் முகநூல் மூலம் ஒன்றிணைந்து தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில் இருக்கும் ஒரு கல்லூரியை சேர்ந்த மாணவர், மாணவிகள் டெல்டா மாவட்டமான தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே இருக்கும் நாடியம் என்ற பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு நிவாரண பொருட்களை Tata Ace வாகனத்தில் அனுப்பினர்.

tata

அப்போது, மாணவ, மாணவிகள் தங்களுக்கு அனுப்பிய நிவாரண பொருட்கள் வண்டியை வெறும் வண்டியாக திருப்பி அனுப்ப மனமில்லாமல் பொருட்கள் ஏற்றி வந்த Tata Ace வாகனம் முழுவதும் இளநீரை அனுப்பி வைத்தனர் டெல்டா விவசாயிகள். அதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடும் சிரமத்தில் இருந்தாலும் கொடுப்பதை மட்டும் நிறுத்தவே மாட்டோம் நாங்கள் கொடுத்து பழகியவர்கள் என டெல்டாவாசிகள் மீண்டும் ஒருமுறை சத்தமாக இந்த சமூகத்தின் கன்னத்தில் அறைந்து கூறியிருக்கிறார்கள். இனியாவது உதவ முன்வராதவர்கள் தங்களால் முடிந்ததை கொடுத்து உதவி செய்து மனிதம் காக்கும் டெல்டாவாசிகளை காப்பாற்ற வேண்டும். சோறுடைத்த சோழ நாடு மீண்டு வர அனைவரும் கரம் கோர்க்க வேண்டும்.