வண்டலூர் அருகில்  புதிய பஸ் நிலையம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

 

வண்டலூர் அருகில்  புதிய பஸ் நிலையம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

வண்டலூர் அருகில் உள்ள   கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம்  அமைக்கப்படவுள்ளதாகத்  தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை: வண்டலூர் அருகில் உள்ள   கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம்  அமைக்கப்படவுள்ளதாகத்  தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதல்வர்  எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும்  சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, தெற்கு நோக்கி செல்லும் புறநகர் பஸ்களுக்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூலம் காஞ்சீபுரம் மாவட்டம், வண்டலூர் அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட இருக்கிறது.

44.74 ஏக்கர் நிலப்பரப்பில் 393 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக் கப்பட உள்ள புதிய புறநகர் பஸ் நிலையத்திற்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இப்புதிய பஸ் நிலையம், சுமார் 6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடி கொண்ட கட்டுமானத்துடன் அமைக்கப்பட உள்ளது. இந்த பஸ் நிலையம், சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பயணிகள் பயன்பெறும் வகையிலும், 250 பஸ்கள் ஒரே சமயத்தில் நிறுத்தக்கூடிய வகையிலும், 270 கார்கள் மற்றும் 3 ஆயிரத்து 500 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் செய்யப்பட உள்ளது.

அதேபோல், எரிபொருள் நிரப்பும் நிலையம், புறக்காவல் நிலையம், கழிவுநீர் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், துணை மின்நிலையம், தாய்ப்பாலூட்டும் அறை, முதலுதவி மையம், மருந்தகம், ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கான ஓய்வறைகள், பயணிகளுக்கான காத்திருக்கும் அறை, பயணிகள் ஓய்வறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

‘தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம், 2017’ மற்றும் அதற்கான விதிகள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சட்டத்தினை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தவும், பொதுமக்கள் எளிதாக பின்பற்றுவதற்காகவும் உருவாக்கப்பட்ட www.tenancy.tn.gov.in என்ற இணையதளத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மேலும், இதற்கான புத்தகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். இப்புதிய சட்டத்தின்படி, ஒருமித்த கருத்தின் மூலமே அனைத்து வாடகை ஒப்பந்தங்களையும் ஏற்படுத்த முடியும். வாடகை ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாடகை விதிக்கப்படும். குத்தகைவிடுபவர் 3 மாத வாடகையை முன்பணமாகப் பெறமுடியும். புதிய சட்டத்தில் உரிமைதாரர் மற்றும் குத்தகைதாரர் இணைந்து வாடகை ஒப்பந்தத்தில் உள்ளபடி வளாகத்தை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள வரையறுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, வேலூரில் 191 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதேபோல், ரூ.157 கோடியே 19 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட 102 பள்ளி கட்டிடங்களையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், பா.பென்ஜமின், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பி.கே.வைரமுத்து, தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் ச.கிருஷ்ணன், சென்னைப் பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் முதன்மைச் செயலாளர் மற்றும் உறுப்பினர் செயலர் ராஜேஷ் லக்கானி, பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், உள்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.