வணிக மின் கட்டணத்துக்கு சலுகை! – டிடிவி தினகரன் கோரிக்கை

 

வணிக மின் கட்டணத்துக்கு சலுகை! – டிடிவி தினகரன் கோரிக்கை

கடந்த மார்ச் மாதம் வீடு வீடாக சென்று மின்சார பயன்பாடு கணக்கெடுக்கும் பணி நடைபெறவில்லை. ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இதற்கு முந்தைய மாத கட்டணத்தையே செலுத்தும்படி மின்சார வாரியம் கூறியுள்ளது.

வணிக, தொழில் நிறுவனங்கள் கட்ட வேண்டிய மின் கட்டணத்துக்கு சலுகை வழங்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் வீடு வீடாக சென்று மின்சார பயன்பாடு கணக்கெடுக்கும் பணி நடைபெறவில்லை. ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இதற்கு முந்தைய மாத கட்டணத்தையே செலுத்தும்படி மின்சார வாரியம் கூறியுள்ளது. வீடுகளில் இருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு குழப்பத்தையே தந்தது. அடுத்து ரீடிங் எடுக்கும்போது எதன் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும் என்ற கேள்வி எழுந்தது.
அதே நேரத்தில் கடைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருப்பதால் அதன் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வணிகமே நடைபெறாத நிலையில் வாடகை, மின்சார கட்டணம், தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் என்று ஏகப்பட்ட பிரச்னைகள்.

electricity

இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கிப்போய் உள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கான மின்சார கட்டணத்தில் சலுகை வேண்டும் என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
“கடந்த முறை செலுத்திய அதே மின்கட்டணத்தை இந்த முறையும் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வீடுகளுக்கு சரியாக இருக்கலாம்.ஆனால் 15 நாட்களுக்கும் மேலாக சிறு குறுதொழிற்சாலைகள்,வணிகநிறுவனங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டிருப்பதால் பணப்புழக்கம் இல்லாத வணிகர்களுக்கு இது சிரமத்தை தரும்.
எனவே வணிகரீதியான மின் இணைப்புகளுக்கு கட்டணத்தொகை மற்றும் கால அவகாசத்தில் உரிய சலுகை வழங்கும்படி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில் கிறிஸ்தவர்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களைக் கூறியுள்ளார். அதில், “ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள்!
கருணையே வடிவான  இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.