வட திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோயில்: பார்வதி தேவி தவம் செய்த அற்புத திருத்தலம்

 

வட திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோயில்: பார்வதி தேவி தவம் செய்த அற்புத திருத்தலம்

பார்வதி தேவி தவம் செய்ய தேர்வு செய்த அற்புத திருத்தலம் திருமுல்லைவாயில் ஆகும்.

சென்னை: சென்னையை அடுத்துள்ள வட திருமுல்லைவாயில் பச்சையம்மன் திருத்தலமானது அம்பத்தூரில் இருந்து ஆவடிக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் நிறைந்த இந்த பச்சைமலை அம்மன் கோயில், சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே சிறப்புடன் திகழ்ந்திருக்கிறது.அன்னை பார்வதி,இமயமலையிலிருந்து மரகதவல்லியாக வந்து சென்னை திருமுல்லைவாயலில் குடிகொண்டதால் இங்கு அம்மனை பச்சைமலை அம்மன் என அழைத்து வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

சிவனும் பார்வதியும் வீற்றிருக்க அங்கே வந்த பிருங்கி மாமுனிவர் சிவனை மட்டும் வலம் வந்து வழிபட்டுச் சென்றார். சிவசக்தியான பார்வதி தேவி, இருவரையும் வணங்காமல் சிவனை மட்டும் பிரித்து வணங்கிச் செல்வது நியாயமில்லை என வாதிட்டதோடு, இது போன்ற தவறு இனி ஏற்படாமல் இருக்கச் சிவனின் உடலில் சரிபாதி வேண்டும் என வேண்டினார். சிவன் மறுக்க, வைராக்கியத்தோடு சிவனைப் பிரிந்து தவம் செய்ய உரிய அனுமதியைப் பெற்றார்.

 

திரு 1

காவி உடை, ருத்திராட்சம், சடை தரித்துப் பூலோகத்துக்கு வந்து தவம் செய்ய சரியான இடத்தைத் தேடினார். இமயம் தொடங்கி ராமேஸ்வரம், கன்னியாகுமரிவரை அனைத்துத் தலங்களிலும் நீராடி, சிவபிரான் குடிகொண்டுள்ள தலங்களில் சிவபூஜை செய்யக் கிளம்பினார். பார்வதியுடன் அவருடைய தோழிகளான 64 யோகினியர் துணையாக வந்தார்கள்.

காசி முடிந்து உஜ்ஜயினி வரும்போது அக்னி வீரன், ஆகாச வீரன் உட்பட மொத்தம் ஏழு சகோதரர்கள் பெண் பித்தர்களாகவும் அநீதர்களாகவும் கொடுமையானவர்களாகவும் நாட்டை ஆண்டு வந்தனர்.அக்னி வீரன்,அழகு மிகுந்த பெண்ணான உமாதேவியிடம் சென்று தான் அவரைக் கண்டு மோகிப்பதாகக் கூறினான்.பார்வதி உடனே சிவனைத் துதிக்க, திருமால் பிரம்மா மற்றும் அஸ்வினி தேவர்கள் அவருக்கு பக்கத் துணையாக வந்தனர்.

தன் சகோதரியிடம் தகாத வார்த்தை பேசிய அக்னி வீரனை கண்டு பெரிய அரக்க வடிவம் கொண்ட திருமால், வானளவு உயர்ந்து அவனைத் தன் காலடியில் அழுத்திச் செயலற்றவனாக்கினார். வானளவு உயர்ந்து நின்றதால் வான் முனி எனப்பட்டு வாழ்முனியாக மருவி அழைக்கப்பட்டார். உடன் வந்த ரிஷிகளும் திருமாலைப் போல் பேருரு கொண்டனர்.அக்னி வீரனின் மகனான வீரமுத்து இதைக் கண்டு வெகுண்டெழுந்து போருக்கு வர,வாழ்முனியான திருமால் அவனது படைகளை அழித்தார். அவனை வதம் செய்யப் போகும்போது அவனுடைய மனைவி வீராட்சி விஷ்ணுவின் காலில் விழுந்து மடிப்பிச்சை கேட்க, வாழ்முனி அவனை விடுவித்தார்.

தேவர்கள் தங்கள் இருப்பிடம் திரும்ப, பார்வதிக்குத் துணையாக மகாலட்சுமி, சரஸ்வதி, இந்திராணி, ஆகியோர் இருப்பார்கள் எனக் கூறிச் சென்றார் திருமால்.சிவன் கட்டளைப்படி அவர்களோடு உமையாள் காசிமா நகர் சென்று அன்னபூரணியாகி அறம் செய்து யோக பூமியான காசியை விட்டு ஒவ்வொரு சிவத்தலமாக பூஜை செய்து மோக பூமியான காஞ்சி செல்லத் தொடங்கினார்.

வழியில் தவம் செய்ய தேர்ந்தெடுத்த திருமுல்லைவாயில் என்னும் இடத்தில் உமையம்மை சிவ கங்கை சூரிய புஷ்கரணி என்னும் சக்தி தீர்த்தத்தை உருவாக்கினார்.அந்தத் திருக்குளத்தின் கரையில் மக்களுக்கும் தேவர்களுக்கும் அல்லல் கொடுத்துவந்த ஹதாசுரனையும் அவனது படைத்துணை மகாபூதத்தையும் அழித்தார். அங்கு கோயில் அமைத்து சிவபூஜை  செய்ய தேர்தெடுக்கப்பட்ட இடம் தான் இன்று நாம் வாழிபாடு செய்யும் பச்சையம்மன் திருத்தலமாகும்.

இக்கோயிலில் மன்மதன் ரதி, பெருமாள், முடியால் அழகி பூங்குறத்தி, விநாயகர், பைரவர் ஆகியோருடன் திருமால் பெரிய மீசையுடன் வாழ்முனியாக அமர்ந்திருக்கிறார். எதிரில் சுகரிஷியும் கருடாழ்வாரும் துணை நிற்கின்றனர். செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி, நாதமுனி, சடாமுனி ஆகிய ஆறு முனிகளும் அமர்ந்து காவல் காக்கின்றனர்.எதிரே அவர்களது குதிரை முதலிய வாகனங்கள் தயார் நிலையில் அணிவகுத்து நிற்கின்றன.

 

திரு 2

எதிரில் கௌதம முனிவர் சிவலிங்க உருவோடு நின்ற கோலத்தில் அருள, அவருக்கு வலப்புறம் பச்சையம்மன் தவக்கோலத்தில் வழிபட்ட மன்னாதீஸ்வரர்,அகோர வீரபத்திரர் சன்னிதிகள் உள்ளன.செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, அமாவாசை,பெளர்ணமி ஆகியவை சிறப்பு தரிசனம் செய்ய சிறந்த நாட்களாக கருதப்படுகிறது.அம்மன் திருத்தலங்களில் நடைபெறும் ஆடி மற்றும் நவராத்திரி போன்ற அனைத்துத் திருநாட்களிலும் இங்கே சிறப்பாக பூஜை நடைபெறுகிறது.