வட்டி விகிதங்களை ரெப்போ ரேட்டுடன் வங்கிகள் இணைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது- சக்திகந்த தாஸ்

 

வட்டி விகிதங்களை ரெப்போ ரேட்டுடன் வங்கிகள் இணைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது- சக்திகந்த தாஸ்

மற்ற வங்கிகளும், டெபாசிட் மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட்டுடன் இணைப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் தெரிவித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டி (ரெப்போ ரேட்) விகிதத்தை குறைத்தாலும் வங்கிகள் அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக வழங்குவதில்லை மேலும் குறைந்த அளவிலேயே கடனுக்கான வட்டியை குறைக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு  டெபாசிட் மற்றும் கடனுக்கான வட்டி விகிதத்தை ரெப்போ ரேட்டுடன் வங்கிகள் இணைக்க வேண்டும் என சென்ற ஆண்டு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியது.  

இந்திய ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியின் கோரிக்கையை ஏற்று ஸ்டேட் வங்கி முதலாவதாக டெபாசிட் மற்றும் கடன்கனுக்கான வட்டி விகிதங்களை ரெப்போ ரேட்டுடன் இணைத்தது. கடந்த மே மாதம் முதல் கடன் மற்றும் டெபாசிட் வட்டி விகிதங்களை ரெப்போ ரேட்டுடன் இணைத்து நடைமுறைப்படுத்தியது. இந்நிலையில் கடந்த வாரம், பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி உள்பட 6 பொதுத்துறை வங்கிகளும் டெபாசிட், கடன் வட்டி விகிதங்களை ரெப்போ ரேட்டுடன் இணைப்பதாக அறிவித்தன.

வட்டி விகிதம்

இந்த சூழ்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்டு வங்கி கருத்தரங்கில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி கவர்னர்  சக்திகந்த தாஸ் பேசுகையில், பொருளாதாரத்துக்கு ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையிலிருந்து மட்டுமல்ல, வட்டி குறைப்பின் பரிமாற்றத்திலிருந்தும் ஒரு குறிப்பிட்ட அளவு ஊக்குவிப்பு தேவைப்படுகிறது. வட்டி குறைப்பு பரிமாற்றம் வேகமாக நடக்க வேண்டும்.   மற்ற வங்கிகளும், புதிய டெபாசிட் மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட்டுடன் இணைப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. இதனை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம் மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என கூறினார்.