வடகிழக்கு மற்றும் கேரளாவில் கனமழையின் கோரத்தாண்டவம்!

 

வடகிழக்கு மற்றும் கேரளாவில் கனமழையின் கோரத்தாண்டவம்!

அரிய வகை ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களைக் கொண்ட காசிரங்கா பூங்காவின் 90 சதவிகித பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.போபிதோரா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அசாம், பீகார், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக பெய்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் பலியானோர் எண்ணிக்கை நூற்றுக்கும் மேலும், ஒரு கோடி பேர் பாதிப்பும் அடைந்துள்ளனர்.  அசாமில் பிரம்மபுத்திரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைக் கடந்து பாய்கிறது. அசாமில் மட்டும் 4,128 கிராமங்களைச் சேர்ந்த  53 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

Assam Floods

மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள‌ பெர்பெட்டா மாவட்டத்தில் மட்டும் 13.48 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோருக்காக 1080 நிவாரண‌ முகாம்கள், 689 உணவு மையங்கள் அமைக்கப்பட்டு நிவாரண நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அரிய வகை ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களைக் கொண்ட காசிரங்கா பூங்காவின் 90 சதவிகித பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.போபிதோரா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Kaziranga Park Floods

பீகாரில் ஏற்பட்டுள்ள க‌டும் வெள்ளத்தால் மண் சரிவு, சுவர் இடிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களால் 78 பேர் உயிரிழந்துவிட்டனர், 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் பெய்யும் தொடர்மழையால், அங்கிருந்து பீகார் வழியாக பாயும் ஆறுகளில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட‌ மண்சரிவு மற்றும் வெள்ளடத்தால் மேகாலயாவில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் மழை குறைந்திருந்தாலும் வெள்ளம் இன்னும் வடியத்தொடங்க வில்லை. ஆனால், மேகாலயாவில் இன்னமும் மழை தொடர்கிறது.

National Disaster Response Force

இதனிடையே கேரளா மாநிலத்தின் இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களில் 20 செ.மீ. அளவுக்கு மிக கனமழைக்கான உச்சகட்ட எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, வெள்ள அபாயம் உள்ள  மாவட்டங்களில் தாழ்வான இடங்களில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி தொடங்கி உள்ளது. கோட்டயத்தின் மீனாட்சில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பம்பை அணை நிரம்பி உள்ளதால், பம்பா ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று மேலக்கரா அணையும் திறக்கப்பட்டுள்ளது. அந்த ஆற்றில் பாயும் வெள்ளத்தால் ஆலப்புழா மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.