வடகிழக்கு பருவமழைக்காக 38 கோடியே 52 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு!

 

வடகிழக்கு பருவமழைக்காக 38 கோடியே 52 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு!

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினை வலுப்படுத்தவும்  அதற்குத் தேவையான உபகரணங்கள் வாங்கவும்  ரூ. 30 கோடியே 27 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை:  வடகிழக்கு பருவமழையையொட்டி 38.52 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இதில் வடகிழக்கு பருவமழை காரணமாக எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

rain

இதில் மழை காற்றின் காரணமாகச் சாலைகளில் விழும் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட ஆட்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் போன்றவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மழையின் காரணமாக ஏற்படும் நோய் தொற்றைத் தடுக்கும் வகையில் பிளிச்சிங் பவுடர், மருந்துகள் மற்றும் இதர பொருட்கள் முன்கூட்டியே இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. 

edappadi

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினை வலுப்படுத்தவும்  அதற்குத் தேவையான உபகரணங்கள் வாங்கவும்  ரூ. 30 கோடியே 27 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல்  சென்னை மாநகராட்சிக்கு உபகரணங்களுக்காக ரூ.  7 கோடியே 25 லட்சம் நிதியும், மீன்வளத் துறைக்கு உபகரணங்களுக்காக ஒரு கோடி ரூபாய் என மொத்தம் 38 கோடியே 52 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.