வடகிழக்கு டெல்லி கலவர பலி எண்ணிக்கை 38ஆக உயர்வு…. 48 எப்.ஐ.ஆர். பதிவு

 

வடகிழக்கு டெல்லி கலவர பலி எண்ணிக்கை 38ஆக உயர்வு…. 48 எப்.ஐ.ஆர். பதிவு

வடகிழக்கு டெல்லியில் இதுவரை கலவரத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த கலவரம் தொடர்பாக 48 எப்.ஐ.ஆர்-களை போலீசார் பதிவு செய்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. அதற்கடுத்த நாட்களில் இந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. கடந்த புதன்கிழமை வரையிலான 4 நாட்களும் வடகிழக்கு டெல்லியில் திரும்பிய பக்கம் எல்லாம் போர்க்களமாக தெரிந்தது.

வடகிழக்கு டெல்லி கலவரம்

இருப்பினும் டெல்லி போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் கலவரம் கட்டுக்குள் வந்தது. நேற்று வடகிழக்கு டெல்லியில் எந்தவொரு வன்முறை சம்பவங்களும் நடந்ததாக தகவல் வரவில்லை. அதேசமயம் வடகிழக்கு டெல்லியில் கலவரத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக டெல்லி காவல்துறையின் பி.ஆர்.ஓ., எம்.எஸ். ரந்தாவா கூறியதாவது:  நேற்று வடகிழக்கு டெல்லியில் இயல்பு நிலை திரும்பியதாகவும், எந்தவொரு பகுதியிலும் வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை. 

வடகிழக்கு டெல்லி கலவரம்

போதுமான படைகள் குவிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரம் தொடர்பாக டெல்லி போலீசார் 48 எப்.ஐ.ஆர்.-களை (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்துள்ளனர்.டெல்லி காவல்துறையின் குற்ற பிரிவின்கீழ் இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து எப்.ஐ.ஆர்-களும் இந்த குழுக்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கலவரம் தொடர்பாக போலீசார் 400க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.