வடகிழக்கு டெல்லி கலவரம்…..167 எப்.ஐ.ஆர். பதிவு….. 885 பேர் கைது…. 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…..படிப்படியாக திரும்பி வரும் இயல்பு வாழ்க்கை…..

 

வடகிழக்கு டெல்லி கலவரம்…..167 எப்.ஐ.ஆர். பதிவு….. 885 பேர் கைது…. 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…..படிப்படியாக திரும்பி வரும் இயல்பு வாழ்க்கை…..

வடகிழக்கு டெல்லியில் இயல்பு வாழ்க்கை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது. மேலும் அந்த பகுதியில் நடந்த கலவரம் தொடர்பாக டெல்லி போலீசார் 167 எப்.ஐ.ஆர்.களை பதிவு செய்ததுடன் 885 பேரை கைது செய்துள்ளனர்.

வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று மோதல் ஏற்பட்டது. அதற்கு அடுத்த நாட்களில் இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது. கடந்த புதன்கிழமை வரை நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் வடகிழக்கு டெல்லி பகுதி போர்க்களமாக காட்சி அளித்தது. பிரச்சினையை பெரிதாக்கும் நோக்கில் கலவரகாரர்கள் பெரிய அளவில் வன்முறையை கையாண்டதே இதற்கு காரணம். இருப்பினும், போலீசின் கடுமையான நடவடிக்கைகளால் தற்போது அங்கு இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது.

கலவரகாரர்களால் சூறையாடப்பட்ட பள்ளி
 வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கலவரம் தொடர்பாக 167 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்துள்ளோம். ஆயுத சட்டத்தின்கீழ் 36 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். டிவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஆத்திரமூட்டும் பதிவுகளை போஸ்ட் செய்தது தொடர்பாக 13 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 885 பேரை கைது செய்துள்ளோம் என தெரிவித்தார். 

பள்ளிகளுக்கு விடுமுறை

வடகிழக்கு டெல்லி பள்ளிகளுக்கு வரும் 7ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் முகுல் வாஸ்னிக், அரியானா காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா உள்ளிட்டோர் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் குழு நேற்று வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லி பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து பேசினர்.