வஞ்சிக்கப்படும் புதுக்கோட்டை தொகுதி; நான்கு எம்.பி.,-க்களுக்கு வாக்களித்தும் பலனில்லை!

 

வஞ்சிக்கப்படும் புதுக்கோட்டை தொகுதி; நான்கு எம்.பி.,-க்களுக்கு வாக்களித்தும் பலனில்லை!

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக நான்கு எம்.பி.,-க்களுக்கு வாக்களித்தும், எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படாததால் புதுக்கோட்டை மாவட்டம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது

புதுக்கோட்டை: தொகுதி மறுசீரமைப்பு காரணமாக நான்கு எம்.பி.,-க்களுக்கு வாக்களித்தும், எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படாததால் புதுக்கோட்டை மாவட்டம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது.

புதுகோட்டை சமஸ்தானம்:

தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியில் கல்வி, மருத்துவம்,  கலை, இலக்கியம் எதற்கும் பஞ்சமில்லாமல் தனி ஒரு சட்டமன்றத்தையே நடத்திய பெருமை புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு உண்டு.

pudukottai

கடந்த 1951-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் இருந்த 39 நாடாளுமன்ற தொகுதிகளில் புதுக்கோட்டையும் ஒன்றாக திகழ்ந்தது. ஆனால் 2009 நாடாளுமன்றத் தேர்தலின் போது, தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் புதுக்கோட்டை தூக்கி எறியப்பட்டது. தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் புதுக்கோட்டையும் ஒன்று.

பிய்த்துப் போடப்பட்ட புதுகோட்டை தொகுதி:

2004-ஆம் ஆண்டு வரை கொளத்தூர் (தனி), அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஆலங்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளை இணைத்து புதுக்கோட்டை தொகுதியாக இருந்த்து. திருமயம் சிவகங்கை தொகுதியில் இருந்தது. சீரமைப்பு காரணமாக கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி எடுக்கப்பட்டு கந்தர்வகோட்டை தொகுதி உருவாக்கப்பட்டது.

pudukottai

அதன் பிறகு புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிகள் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கும், விராலிமலை கரூர் தொகுதிக்கும், திருமயம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிகள் சிவகங்கை தொகுதிக்கும், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி ராமநாதபுரம் தொகுதிக்கும் சென்றது. இதனால், நான்கு எம்.பி.,-க்களுக்கு வாக்களிக்கும் நிலைக்கு புதுகோட்டை மாவட்ட மக்கள் தள்ளப்பட்டனர். எனினும், புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சிப் பணிகளும் நிறைவேறவில்லை.

வளர்சி பணிகளில் எம்.பி.,-க்களுக்கு ஆர்வமில்லை:

காவேரி – வைகை நதி நீர் இணைப்பு திட்டம், புதுக்கோட்டைக்கு கூடுதல் ரயில்கள் என்பன உள்ளிட்ட எந்த திட்டத்துக்கும் வளர்ச்சிப் பணிகளுக்குமே நான்கு எம்.பி.,-க்களும் ஆர்வம் காட்டுவதில்லை என்பது இந்த பகுதி மக்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. எந்த எம்.பி.,-யை தொடர்பு கொள்வது என்பதே மாவட்ட மக்களுக்கு தெரியாத நிலை தான் உள்ளது.

pudukottai

புதுகோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் எந்த கூட்ட்டதுக்கும் எந்த எம்.பி.,-யும் வருவதில்லை என குற்றம் சாட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் மூத்த அதிகாரி, அரசியல் லாபத்துக்காக பிரசாரம், பொதுக் கூட்டம் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி கோர மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கட்சியினர் வந்து விடுவர் எனவும் சுட்டிக் காட்டுகிறார்.

சூடுபிடிக்கும் போராட்டம்; நோடாவுக்கே என் வாக்கு:
nota

இந்த நிலையில், வளர்ச்சிப் பணிகளுக்காக புதுக்கோட்டையை தனி ஒரு நாடாளுமன்ற தொகுதியாக மாற்றம் வேண்டும் என நீண்டகாலமாக போராடி வரும் இம்மாவட்ட மக்கள், ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலிலும் தங்களது எதிர்ப்பை காட்ட தொடங்கினர். ஒரு பக்கம் அரசியல் கட்சிகளின் வாக்கு சேகரிப்பு, மறுபக்கம் நோட்டாவுக்கு வாக்கு சேகரிப்பும் நடந்தது. அந்த வகையில், 2009-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 13,680 வாக்குகளும், 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 50,932 வாக்குகளும் நோட்டாவில் பதிவாகின.

அதேபோல், இந்தத் தேர்தலிலும் புதுக்கோட்டை தொகுதியை மீண்டும் கேட்கும் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தொகுதி மீட்பு போராட்டத்தை அம்மாவட்ட மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.