வங்கியின் மோசமான நிதி நிலைமை…. யெஸ் வங்கிக்கு தடை விதித்த ரிசர்வ் வங்கி…..

 

வங்கியின் மோசமான நிதி நிலைமை…. யெஸ் வங்கிக்கு தடை விதித்த ரிசர்வ் வங்கி…..

மோசமான நிதி நிலைமை காரணம் காட்டி, யெஸ் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒரு மாதம் தடை விதித்துள்ளது.

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி சமீபகாலமாக நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வந்தது. அதேசமயம் நிதி திரட்டும் நடவடிக்கைகளிலும் அந்த வங்கி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் நேற்று இந்திய ரிசர்வ் வங்கி திடீரென யெஸ் வங்கிக்கு ஒரு மாதம் தடை விதித்துள்ளது. மேலும், அந்த வங்கியின் இயக்குனர்கள் குழுவையும் 30 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது.

யெஸ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், யெஸ் வங்கியில் நம்பகமான மறுமலர்ச்சி திட்டம் இல்லாத நிலையில், பொது நலன் மற்றும் வங்கி டெபாசிட்தாரர்களின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி ஒரு முடிவுக்கு வந்தது. 1949ம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் 45வது பிரிவின்கீழ், யெஸ் வங்கிக்கு தடை விதிக்ககோரி மத்திய அரசுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதன்படி, யெஸ் வங்கிக்கு மத்திய அரசு விதித்த தடை இன்று (நேற்று) முதல் அமலுக்கு வருகிறது. அடுத்த மாதம் 3ம் தேதி வரை இது அமலில் இருக்கும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி

மேலும், யெஸ் வங்கியின் மோசமான நிதி நிலைமை காரணமாக அந்த வங்கியின் இயக்குனர்கள் குழுவையும் சஸ்பெண்ட் செய்துள்ளது. மறுசீரமைப்பு அல்லது ஒருங்கிணைப்பதற்கான ஒரு திட்டத்தை வைப்பதன் மூலம் அந்த வங்கியின் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை விரைவாக மீட்டெடுப்பதற்காக இயக்குனர்கள் குழுவை ரிசர்வ் வங்கி சஸ்பெண்ட் செய்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் டி.எம்.டி. மற்றும்  சி.எப்.ஓ. பிரசாந்த் கிஷோர் யெஸ் வங்கியின் நிர்வாகியாக ரிசர்வ் வங்கி நியமனம் செய்துள்ளது.