லாரி வாடகை கட்டணம் கிடுகிடு உயர்வு; அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

 

லாரி வாடகை கட்டணம் கிடுகிடு உயர்வு; அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை கட்டணம் 25 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதால் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை கட்டணம் 25 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதால் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதை கண்டித்து நாடு முழுவதும் சமீபத்தில் எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தின.

எனினும், நாடு முழுவதும் பெட்ரோல் – டீசல் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விற்பனையாகிறது. கடந்த 15 மாதங்களில் மட்டும் பெட்ரோல் விலை 32 சதவீதமும், டீசல் விலை 38 சதவீதமும் உயர்ந்துள்ளன. இது வரலாறு காணாத விலை உயர்வு ஆகும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுப் போக்குவரத்து சேவையை பொதுமக்கள் கடந்த சில நாட்களாக அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், கடந்த சில நாட்களாக பேருந்து, ரயில்களில் அலுவலக நேரங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையின் தொடர் ஏற்றம் காரணமாக சரக்கு லாரி வாடகை கட்டணத்தை உயர்த்துவது பற்றி சரக்கு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் ஆலோசனை நடத்தியது. அதனடிப்படையில், நேற்று முதல் லாரி வாடகை கட்டணம் 22 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து லாரி புக்கிங் ஏஜென்ட்கள் சம்மேளன மாநில தலைவர் ராஜவடிவேல் கூறுகையில், கடுமையான சுங்க கட்டணம் உயர்வு, இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு, டயர் விலை உயர்வு என்று பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், தற்போது டீசல் விளையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால் லாரி புக்கிங் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். பொதுமக்கள் கட்டண உயர்வை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

இதன் காரணமாக சென்னையிலிருந்து சேலத்திற்கான வாடகை ரூ.8500-லிருந்து ரூ.10,000 ஆக அதிகரித்திருக்கிறது. தமிழகத்திலிருந்து டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு செல்வதற்கான வாடகை ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.1.40 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, பெட்ரோல், டீசல் உயர்வு காரணமாக பேருந்து, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், லாரிகளின் வாடகை கட்டணமும் உயர்த்தப்பட்டால், அத்தியாவசியப் பொருட்கள் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.