லாக் டவுன் நேரத்தில் கடமையில் அலட்சியமாக இருந்த 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடைநீக்கம்…. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…

 

லாக் டவுன் நேரத்தில் கடமையில் அலட்சியமாக இருந்த 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடைநீக்கம்…. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…

லாக் டவுன் (முடக்கம்) நேரத்தில் கடமையில் அலட்சியமாக இருந்த டெல்லியின் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மத்திய உள்துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் 2 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் முடக்கத்தால் வேலை வாய்ப்பு மற்றும் வருமானத்தை இழந்ததால் டெல்லியில் பணிபுரிந்து வந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்றுமுன்தினம் டெல்லி பஸ்முனையத்தில் குவிந்தனர். முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பஸ்முனையத்தில் குவிந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

டெல்லி பஸ்முனையத்தில் குவிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

இந்நிலையில் முடக்க நேரத்தில் கடமையில் அலட்சியமாக இருந்ததற்காக டெல்லியின் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது மத்திய அரசு நேற்று கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்லி யூனியன் பிரதேசத்தின் கூடுதல் தலைமை செயலர் (போக்குவரத்து), முதன்மை செயலர் (நிதி) ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கூடுதல் தலைமை செயலர் (வீடு மற்றும் நில கட்டிடங்கள்) மற்றும் எஸ்.டி.எம். (சீலாம்புர்) ஆகிய 2 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், கோவிட்-19 பரவுவதை கட்டுபடுத்துவது தொடர்பாக பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் கீழ் அமைக்கப்பட்ட தேசிய செயற்குழு தலைவரால் அறிவுறுத்தல்களுக்கு கண்டிப்பாக இணங்க வேண்டிய இந்த அதிகாரிகள் அதனை செய்ய தவறிவிட்டனர். கோவிட்-19க்கு எதிரான முடக்கத்தின்போது இந்த  அதிகாரிகள் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய தவறி விட்டனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில், கோவிட்19 பரவுவதை கட்டுப்படுத்தும் கடமையில் அலட்சியமாக இருந்ததற்காக  அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது என தெரிவித்தார்.