லாக்டவுன் சமயத்திலும் மத்திய அரசின் கஜானாவை நிரப்பிய நேரடி வரி வசூல்… ஏப்ரலில் ரூ.41,556 கோடி வசூல்…

 

லாக்டவுன் சமயத்திலும் மத்திய அரசின் கஜானாவை நிரப்பிய நேரடி வரி வசூல்… ஏப்ரலில் ரூ.41,556 கோடி வசூல்…

கடந்த ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசின் மொத்த நேரடி வரி வசூல் ரூ.41,556 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் சிறிது குறைவாகும்.

தனி மனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அரசுக்கு நேரடியாக செலுத்துகின்ற பெருநிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி, சொத்து வரி போன்றவை நேரடி வரிகள் ஆகும். ஜி.எஸ்.டி., கலால் வரி போன்றவை மறைமுக வரிகளாகும். மறைமுக வரி அரசால் ஒருவர் மீது விதிக்கப்பட்டாலும் அதனை தாங்குபவர் வேறு ஒருவராக இருப்பார். அதேசமயம் நேரடி வரிகளை மற்றவர் மீது சுமத்த முடியாது.

வருமான வரி

இந்த நிதியாண்டின் முதல் மாதமான கடந்த ஏப்ரல் மாதத்தில், மத்திய அரசின் மொத்த நேரடி வரி வசூல் ரூ.41,556 கோடியாக உள்ளது. 2019 ஏப்ரல் மாதத்தை காட்டிலும் இது 5.4 சதவீதம் குறைவாகும். அந்த மாதத்தில் மத்திய அரசின் மொத்த நேரடி வரி வசூல் ரூ.43,950 கோடியாக இருந்தது. கொரோனா வைரஸ் மற்றும் அடுத்தடுத்த தடைகள் பெரும்பாலான துறைகளை முடக்கியதால் பொருளாதார நடவடிக்கைகள் மந்தமானதை இந்த வரி வசூல் வெளிப்படுத்துகிறது.

வருமான வரி

கடந்த மாதத்தில் ரூ.6,772  கோடி வரி ரீபண்ட்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது 2019ம் ஆண்டைக் காட்டிலும் 3 மடங்கு குறைவாகும். அந்த மாதத்தில் ரூ.18,474 கோடி வரி ரீபண்ட்ஸ் வழங்கப்பட்டு இருந்தது. 2020 ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசின் நிகர நேரடி வரி வசூல் 36.5 சதவீதம் அதிகரித்து ரூ.34,784 கோடியாக உயர்ந்துள்ளது. வரி ரீபண்ட்ஸ் குறைந்ததே இதற்கு காரணம். நாடு தழுவிய அளவில் லாக்டவுன் நடைமுறையில் உள்ளபோதிலும் நிகர நேரடி வரி வசூல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.