லாக்டவுனால் போன மாசம் ஒரு கார் கூட போணியாகவில்லை…. கடும் சோகத்தில் கார் தயாரிப்பு நிறுவனங்கள்…

 

லாக்டவுனால் போன மாசம் ஒரு கார் கூட போணியாகவில்லை…. கடும் சோகத்தில் கார் தயாரிப்பு நிறுவனங்கள்…

லாக்டவுனால், மாருதி சுசுகி, மகிந்திரா உள்பட பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டில் ஒரு கார் கூட விற்பனை செய்யவில்லை என தகவல் தெரிவித்துள்ளன.

2019ம் ஆண்டில் வாகன விற்பனை நிலவரம் மிகவும் மோசமாக இருந்ததால் அந்த ஆண்டு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு  இருண்ட காலமாக இருந்தது. சரி இந்த ஆண்டில் விற்பனை எப்படியும் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தன. ஆனால் எதிர்பாராத வண்ணமாக கொரோனா வைரஸ் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் நம்பிக்கையை தகர்த்து விட்டது.

கார்கள்

தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு  நாடு தழுவிய லாக்டவுனை கடந்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை செயல்படுத்தியது. பின் லாக்டவுனை மே 3ம் தேதி (இன்று) வரை நீட்டித்தது. லாக்டவுன் காலத்தில் வாகன தயாரிப்பு ஆலைகள் மூடப்பட்டன. மேலும் வாகன டீலர் கடைகளும் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் கடந்த மார்ச் மாதத்தில் உள்நாட்டில் வாகன விற்பனை சுமார் 50 சதவீதம் குறைந்தது.

ஆலைகள், நிறுவனங்கள் மூடல்

இந்திய வாகன துறை வரலாற்றில் முதல் முறையாக கடந்த ஏப்ரல் மாதத்தில் பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உள்நாட்டில் ஒரு கார் கூட விற்பனை செய்யவில்லை. 2019 ஏப்ரல் மாதத்தில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் உள்நாட்டில் 2.50 லட்சம் கார்களை விற்பனை செய்து இருந்தன. மாருதி சுசுகி இந்தியா, ஹுண்டாய், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் இந்தியா, எம்.ஜி. மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த மாதம் உள்நாட்டில் ஒரு கார் கூட விற்பனை செய்யவில்லை தகவல் தெரிவித்துள்ளன.

கார் தயாரிப்பு ஆலை

அதேசமயம் துறைமுகங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியதால் கடந்த ஏப்ரல் மாதத்தில் மாருதி சுசுகி உள்ளிட்ட சில நிறுவனங்கள் கார்களை ஏற்றுமதி செய்தன. மாருதி சுசுகி நிறுவனம் 632 கார்களை ஏற்றுமதி செய்தது. ஹுண்டாய் நிறுவனம் 1,341 கார்களை ஏற்றுமதி செய்து இருந்தது. மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் மொத்தம் 733 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. தற்போது மத்திய அரசு லாக்டவுனை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்துள்ளது. இருப்பினும் சில தளர்வுகளை அறிவிக்கப்பட்டு இருப்பது வாகனத் துறைக்கு ஆறுதலான விஷயம்.