லாக்டவுனால் தொழில்துறை உற்பத்தி வீழ்ச்சி… இன்னும் கொஞ்சம் நாளைக்கு பொருளாதார வளர்ச்சியை நினைச்சு பார்க்காதீங்க…

 

லாக்டவுனால் தொழில்துறை உற்பத்தி வீழ்ச்சி… இன்னும் கொஞ்சம் நாளைக்கு பொருளாதார வளர்ச்சியை நினைச்சு பார்க்காதீங்க…

லாக்டவுனால் கடந்த மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி கடும் சரிவை சந்தித்தது. தொடர்ந்து 3வது மாதமாக கடந்த ஏப்ரலில் சில்லரை விலை பணவீக்கம் 5.84 சதவீதமாக சிறிது குறைந்தது.

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகிய முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 2020 மார்ச் மாதத்தில் 6.5 சதவீதம் குறைந்தது. அதனால் அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தியும் சரிவுகண்டுதான்  இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை கணக்கிடுவதில் முக்கிய 8 துறைகளின் பங்கு 40 சதவீதம் உள்ளது. அதனால் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி குறைந்தாலும், ஏற்றம் கண்டாலும் அதன் தாக்கம் தொழில்துறை உற்பத்தியில் வெளிப்படும். எதிர்பார்த்தது போலவே கடந்த மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.

தொழிற்சாலை

2020 மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 16.7 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. அந்த மாதத்தில் ஒரு வார லாக்டவுன் (மார்ச் 25 முதல் மார்ச் 31வரை) இருந்ததே இதற்கு காரணம். 2019 மார்ச மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 2.7 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது. நாடு தழுவிய லாக்டவுனால் கடந்த மார்ச் மாதத்தில் சுரங்கம், தயாரிப்பு மற்றம் மின்துறைகளில் உற்பத்தி மிகவும் குறைவாக இருந்தது.

கடைகள்

ஒரு வார லாக்டவுனுக்கே தொழில்துறை உற்பத்தி இந்த அளவுக்கு கடும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், எஞ்சிய லாக்டவுன் காலத்தில் குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி எப்படி இருக்குமோ என்று நினைத்தாலே கவலையாக இருக்கிறது. மேலும், லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்பட உள்ளதால் இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சி குறித்த அச்சமும் தலைதூக்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5.84 சதவீதமாக சிறிது குறைந்தது. 2020 மார்ச் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5.91 சதவீதமாக உயர்ந்து இருந்தது.