லாக்டவுனால் கடந்த மார்ச்சில் வாகன விற்பனை 45 சதவீதம் சரிவு… நெருக்கடியில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள்….

 

லாக்டவுனால் கடந்த மார்ச்சில் வாகன விற்பனை 45 சதவீதம் சரிவு… நெருக்கடியில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள்….

கடந்த மார்ச் மாதத்தில் நம் நாட்டில் மொத்தம் 10.50 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 45 சதவீதம் குறைவாகும்.

2020 மார்ச் மாத வாகன விற்பனை தொடர்பாக இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த மார்ச் மாதத்தில் பைக், கார், வர்த்தக வாகனங்கள் என ஒட்டு மொத்த அளவில் 10.50 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் சுமார் 45 சதவீதம் குறைவாகும். 2019 மார்ச் மாதத்தில் மொத்தம் 19.08 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது.

பைக்குகள்

2020 மார்ச் மாதத்தில் இரு சக்கர வாகன விற்பனை சுமார் 40 சதவீதம் குறைந்து 8.66 லட்சமாக சரிந்தது. அந்த மாதத்தில் வர்த்தக வாகனங்கள் மொத்தம் 13,027 மட்டுமே விற்பனையாகி இருந்தது. மேலும் 1.43 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன தயாரிப்பு ஆலை

இந்திய வாகன  தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (சியாம்) தலைவர் ராஜன் வதேரா கூறுகையில், வாகன துறைக்கு 2020 மார்ச் மாதம் மிகவும் சவாலான மாதங்களில் ஒன்றாக இருந்தது. 21 நாள் லாக்டவுனால் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை கடந்த வாரம் நிறுத்தப்பட்டது. வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டதால், நிலையான செலவினம் மற்றும் பணி மூலதன தேவைகளை பூர்த்தி செய்வதில் ஒரிஜினல் உபகரண உற்பத்தியாளர்கள் கடுமையாக போராடினர். எங்களது மதிப்பீட்டின்படி, ஆலைகள் மூடப்பட்டு இருப்பதால் ஒவ்வொரு நாளும் ரூ.2,300 கோடி உற்பத்தி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.  என தெரிவித்தார்.