லண்டன் உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தபோதிலும் கவலைப்படாத விஜய் மல்லையா.. அடுத்து இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் மனு….

 

லண்டன் உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தபோதிலும் கவலைப்படாத விஜய் மல்லையா.. அடுத்து இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் மனு….

இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்த மனுவை லண்டன் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் இங்கிலாந்தின் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

மதுபான சக்கரவர்த்தியும், ஒடாமல் முடங்கி கிடக்கும் கிங்பிஷர் விமான நிறுவனத்தின் உரிமையாளருமான விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடனை வாங்கி விட்டு வேண்டும் என்றே திரும்ப செலுத்தாமல் டிமிக்கி கொடுத்து வந்தார். இந்நிலையில், கொடுத்த கடனை திரும்ப கேட்டு வங்கிகள் நெருக்கடி கொடுக்க தொடங்கின மேலும் மல்லையாவுக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தன.

லண்டன் உயர் நீதிமன்றம்

மேலும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விஜய்மல்லையா மீது வழக்குகள் பதிவு செய்தன. இதற்கு மேலும் இங்கிருந்து கொண்டு ஏமாற்ற முடியாது என்பதை தெரிந்து கொண்ட விஜய் மல்லையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்துக்கு தப்பியோடி விட்டார். இதனையடுத்து விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்திடம் கோரிக்கை விடுத்தது. மேலும் லண்டன் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது.

விஜய் மல்லையா

வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து லண்டன் நீதிமன்றத்தை உத்தரவை எதிர்த்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் விஜய்மல்லையா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த லண்டன் உயர் நீதிமன்றம் மல்லையாவின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் இன்னும் சில வாரங்களில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எல்லாம் அவ்வளவு சீக்கிரம் சிக்க மாட்டேன் என்கிறார் விஜய் மல்லையா. அடுத்த 13 நாட்களுக்குள் விஜய் மல்லையா இங்கிலாந்தின் உச்ச நீதிமன்றத்தில் லண்டன் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.