ரோகினி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றப்படும் ஒரே சிவன் கோயில் 

 

ரோகினி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றப்படும் ஒரே சிவன் கோயில் 

திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோயில் மலை உச்சியில் ரோகிணி தீபம் ஏற்றப்பட்டது. 

கடலூர்:

கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழியில் பிரசித்தி பெற்ற வாமனபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

திருமால் பிரம்மசாரியாக வந்து மாகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவனையழித்த பழிதீர இங்கு வந்து சிவபெருமானை ஒரு குழி போன்ற இடத்தில் அமர்ந்து வழிபட்டார் ஆகையால் இக்கோயில் மாணிகுழி என்று பெயர் பெற்றது. 

rohini deepam

இத்தலத்து இறைவன் உதவிநாயகர் என்றும் இறைவி உதவி நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இத்தலத்தில் ஆறுமுகப்பெருமான் 12 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்து தனது தேவியர் இருவரும் உடன் நிற்க கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். 

இந்த ஆலயத்தின் ஒரு சிறப்பம்சம் இங்கு உள்ள மூலவரை நாம் நேரடியாக தரிசிப்பது இயலாது. ஏனெனில் எந்நேரமும் மூலவர் சந்நிதியில் திரை போடப்பட்டிருக்கும். இறைவனும், இறைவியும் எப்போதும் சிவசக்தியாக சேர்ந்திருக்கும் தலமாக இது கருதப்படுகிறது.

vamana

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இத்திருக்கோயிலில் திரு கார்த்திகை பிரம்மோற்சவம் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனையும், இரவு சாமி வீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.

பொதுவாக சிவன்கோயில்களில் பரணி நட்சத்திரத்தன்று தீபம் ஏற்றப்படும்.ஆனால் வாமனபுரீஸ்வரர் கோயிலில் மட்டும் பரணி நட்சத்திரத்துக்கு மறுநாள் வரும் ரோகிணி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றப்படும்.

அதன்படி இந்த ஆண்டு ரோகிணி நட்சத்திரமான நேற்று முன்தினம் கோயிலின் முன்புள்ள மலை உச்சியில் ரோகிணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

siva

இதையொட்டி வாமனபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணிக்கு மங்கள வாத்திய இசை ஒலிக்க கோயில் முன்புறம் உள்ள மலை உச்சியில் ரோகிணி தீபம் ஏற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து கோயில் அருகே வைக்கப்பட்டிருந்த 5 சொக்கப்பனைகள் கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.