ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ வங்கி அறிவிப்பு

 

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ வங்கி அறிவிப்பு

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது

மும்பை: வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதம், ரெப்போ ரேட் என்றழைக்கப்படுகிறது. இதுபோலவே வர்த்தக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான அடிப்படை வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெப்போ என அழைக்கப்படுகிறது.

பணவீக்க விகிதத்தைக் கருத்தில்கொண்டு இந்த வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைத்து வருகிறது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்றபின், அதன் முதல் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.25-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதன் முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை தற்போது ஆர்பிஐ குறைத்துள்ளது.

2019 – 20-ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7 புள்ளி 4 சதவீதமாக இருக்கும் என்றும், பணவீக்க விகிதம் ஆண்டின் முதல் பாதியில் 3 புள்ளி 2 சதவீதத்தில் இருந்து 3 புள்ளி 4 சதவீதமாகவும், 3-வது காலாண்டில் 3 புள்ளி 9 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். பிணையில்லா விவசாயக் கடன் வரம்பை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்