ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்க பரிவர்த்தனையா? பான் கார்டுக்கு பதில் ஆதார் யூஸ் பண்ணலாம்!

 

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்க பரிவர்த்தனையா? பான் கார்டுக்கு பதில் ஆதார் யூஸ் பண்ணலாம்!

இனி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்க பரிவர்த்தனை செய்யும் போது பான் எண்ணுக்கு பதிலாக ஆதார் எண்ணை குறிப்பிடலாம் என வருவாய் துறை செயலர் அஜய் புஷன் பான்டே கூறினார்.

டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிக்கும் நோக்கிலும், கருப்பு பணம் ஒழிக்க மற்றும் வரி ஏய்ப்பை தவிர்க்கும் நோக்கிலும், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை செய்தால் அதற்கு வாடிக்கையாளர் தங்களது வருமான வரி பான் எண்ணை குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. அதாவது ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக கொடுத்து பொருட்கள் வாங்கினாலோ அல்லது வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்தாலோ கட்டாயம் பான் எண்ணை குறிப்பிட வேண்டும்.

பான் கார்டு

நம் நாட்டின் மொத்த மக்கள் தொகை 130 கோடிக்கும் அதிகமாக உள்ளது. அதேசமயம் பான் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கையை பார்த்தால் வெறும் 22 கோடிதான். இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய பான் எண்ணுக்கு மாற்றாக ஆதாரை பயன்படுத்தலாம் என மத்திய அறிவித்தது. தற்போது அதனை தொடர்ந்து ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்க பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது பான் எண்ணுக்கு பதில் ஆதாரை பயன்படுத்தலாம் என வருவாய் துறை அறிவித்துள்ளது.

ஆதார் கார்டு

இது குறித்து வருவாய் துறை செயலர் அஜய் புஷன் பான்டே கூறுகையில்,ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்க பரிவர்த்தனை செய்யும் போது பான் எண்ணுக்கு பதில் ஆதாரை குறிப்பிடலாம். வங்கிகளில் டெபாசிட் செய்யும்போது பான் எண்ணுக்கு பதில் ஆதார் எண்ணை குறிப்பிடலாம். தற்போது 120 கோடி பேரிடம் ஆதார் உள்ளது. பான் கார்டு  வேண்டுபவர்கள் முதலில் ஆதாரை பயன்படுத்தி கொள்ளலாம். அதன் பிறகு பான் எண் எடுத்து கொள்ளலாம் என கூறினார்.