ரூ.354 கோடி வங்கி மோசடி வழக்கில் ம.பி. முதல்வர் கமல்நாத் மருமகன் கைது…

 

ரூ.354 கோடி வங்கி மோசடி வழக்கில் ம.பி. முதல்வர் கமல்நாத் மருமகன் கைது…

ரூ.354 கோடி வங்கி மோசடி வழக்கில், இன்று காலையில் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரி கைது செய்யப்பட்டார்.

காங்கிரசின் மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முதல்வருமான கமல்நாத்தின் சகோதரி மகன் ரதுல் பூரி. கடந்த சில மாதங்களாக வரி ஏய்ப்பு முதல் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வரை பல்வேறு வழக்குகளில் ரதுல் பூரி விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், ரூ.354 கோடி மோசடி வழக்கில், இன்று காலையில் ரதுல் பூரி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கமல் நாத்

செயல்படாமல் முடங்கி கிடக்கும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான மோசர் பெர் நிறுவனத்தில் முன்பு மூத்த செயல் அதிகாரியாக பணியாற்றியவர் ரதுல் பூரி. 2009ம் ஆண்டு முதல் மோசர் பெர் நிறுவனம் பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி இருந்தது. மேலும் எதற்காக கடன் வாங்கியதோ அதற்காக பயன்படுத்தாமல் மோசடி செய்தது. ரதுல் பூரியும், அந்த நிறுவனத்தின்  4 முன்னாள் இயக்குனர்களும் போலி ஆவணங்களை அளித்து சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவிடம் ரூ.354 கோடி கடன் பெற்று இருந்தனர்.

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா

மோசர் பெர் நிறுவனம் மோசடி ஆவணங்களை தாக்கல் செய்து தன்னிடம் கடன் வாங்கியதை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கண்டுபிடித்தது. இதனையடுத்து  ரதுல் பூரி மற்றும் 4 முன்னாள் இயக்குனர்கள்  மீது சி.பி.ஐ.யிடம் சென்ட்ரல் பேங்க் இந்தியா வங்கி மோசடி புகார் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக ரூ.354 கோடி வங்கி மோசடி தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சி.பி.ஐ., நேற்று 6 இடங்களில் சோதனை நடத்தியது.

இந்நிலையில், அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தொடர்பாக ரதுல் பூரிக்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கியது. ஆனால் இன்று காலையில் வங்கி மோசடி வழக்கில் ரதுல் பூரி கைது செய்யப்பட்டார் என்று அமலாக்கத்துறை தெரிவித்தது.