ரூ.28 லட்சம் அபராதம் செலுத்தி போர்ஷே காரை திரும்ப பெற்ற குஜராத் வாகன உரிமையாளர்

 

ரூ.28 லட்சம் அபராதம் செலுத்தி போர்ஷே காரை திரும்ப பெற்ற குஜராத் வாகன உரிமையாளர்

குஜராத் போக்குவரத்து போலீசாரால் பறிமுதல் செய்த போர்ஷே காரை, அபராதமாக ரூ.28 லட்சம் செலுத்தி வாகன உரிமையாளர் திரும்ப பெற்ற சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் போக்குவரத்து போலீசார் வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த  ரூ.1.82 கோடி மதிப்பிலான போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த கார் உரிமையாளர் ரஞ்சித் தேசாயிடம் கார் தொடர்பான வாகனங்களை போலீசார் கேட்டனர். ஆனால் அவரிடம் தேவையான ஆவணங்கள் இல்லை. 

அபராத ரசீது

இதனையடுத்து போர்ஷே காரை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.27.68 லட்சம் அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது. ரஞ்சித் தேசாயிடம் அப்போது அபராதம் செலுத்தும் அளவுக்கு பணம் இல்லை என தெரிகிறது. இந்நிலையில் அண்மையில் அபராத தொகையை முழுமையாக செலுத்தி விட்டு தனது போர்ஷே காரை தேசாய் திரும்ப பெற்றுள்ளார். இது தொடர்பான தகவலை அகமதாபாத் போலீசார் டிவிட்டரில் பதிவு செய்துள்ளனர். 

போர்ஷே கார்

நம் நாட்டில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு இதுவரை விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதங்களில் இதுவும் ஒன்று என அகமதாபாத் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். போர்ஷே கார்கள் மிகவும் ஆடம்பரமான மற்றும் ஸ்போர்ட்ஸ் வாகனங்களாகும்.