ரூ. 2,000 நோட்டு இனி கிடையாது: ரிசர்வ் வங்கி கொடுக்கும் அடுத்த ஷாக்

 

ரூ. 2,000 நோட்டு இனி கிடையாது: ரிசர்வ் வங்கி கொடுக்கும் அடுத்த ஷாக்

இரண்டாயிரம் ரூபாய் ரோட்டு இனி அச்சடிக்கப்படாது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி: இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இனி அச்சடிக்கப்படாது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என கூறி புழக்கத்தில் இருந்த ரூ 1000, மற்றும் ரூ 500 நோட்டுக்கள் செல்லாது என கூறி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். மேலும் அதற்கு பதில் புதிதாக ரூ 2000 மற்றும் ரூ 500 நோட்டுக்கள் வெளியிடப்பட்டது. அவரது பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பொருளாதார வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் வருமான வரித்துறையினர் சமீபமாக நடத்திய பல சோதனைகளில் ரூ 2,000 நோட்டு அதிகளவில் சிக்குவதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த மார்ச் 2018-ம் ஆண்டு புள்ளிவிவரத்தின் அடிப்படையில், மொத்தம் ரூ.18.03 லட்சம் கோடி பணம் புழக்கத்தில் உள்ளதாகவும் அதில் ரூ 2,000 நோட்டுகளில் தலா ரூ.6.73 லட்சம் கோடி (37%) புழக்கத்திலும், அதேபோல் ரூ 500 நோட்டுக்களில் ரூ.7.73 லட்சம் கோடி(43%) புழக்கத்திலும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தில், ரூ.2,000 நோட்டுக்களின் புழக்கம், 37%-ஆக குறைந்துள்ளது. அதேசமயம்  ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை 23%-ல் இருந்து 43%-ஆக அதிகரித்துள்ளது என தெரியவந்தது.

இந்நிலையில், ரூ 2,000 நோட்டுக்கள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கறுப்பு பணம் ஒழிக்கப்படும் என்றுதான் உயர் மதிப்புள்ள ரூ 1000 நோட்டுக்களை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு மாற்றாக வெளியிடப்பட்ட ரூ 2,000 நோட்டுக்கள் அச்சிடப்படுவதும் தற்போது நிறுத்தப்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் மூலம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியை சந்தித்திருக்கிறது என்பதை மத்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.