ரூ.1,700 கோடி கடனையும் கொடுத்தாச்சு! பணியாளர்களக்கு நவம்பர் மாத சம்பளத்தையும் போட்டாச்சு… நிம்மதி பெருமூச்சு விட்ட பி.எஸ்.என்.எல். நிறுவனம்….

 

ரூ.1,700 கோடி கடனையும் கொடுத்தாச்சு! பணியாளர்களக்கு நவம்பர் மாத சம்பளத்தையும் போட்டாச்சு… நிம்மதி பெருமூச்சு விட்ட பி.எஸ்.என்.எல். நிறுவனம்….

விற்பனையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய கடனில் ரூ.1,700 கோடியும், பணியாளர்களுக்கு கடந்த நவம்பர் மாத சம்பளமும் வழங்கப்பட்டு விட்டதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்.) தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வருகிறது. சுமார் 20 வருடத்துக்கு முன்பு வரை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையில் கொடி கட்டி பறந்தது. செல்போன் சேவை அறிமுகம் ஆன பிறகும் சில ஆண்டுகள் பி.எஸ்.என்.எல். நிறுவனம் நல்ல நிலையில் இயங்கி கொண்டுதான் இருந்தது.

பி.எஸ்.என்.எல். நிறுவனம்

ஆனால் தொலைத்தொடர்பு துறையில் தனியார் நிறுவனங்களின் அசுர வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்த தவறியது போன்ற காரணங்களால் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அடிவாங்க தொடங்கியது. உதாரணமாக தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தற்போது 5ஜி சேவையை வழங்குவதற்கு தயாராகி வருகின்றன. ஆனால் பி.எஸ்.என்.எல். நிறுவனம் இன்னும் 4ஜி சேவைக்கே மாறவில்லை. மேலும், பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கி வருகிறது.

பி.கே. புர்வார்

இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மத்திய அரசு தனியாருக்கு விற்றுவிடும் என பேச்சு அடிபட்டது. ஆனால் தனியாருக்கு விற்கப்படாது என்று கூறியதுடன், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு திருப்பதற்கு பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை அறிவித்தது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஒப்பந்ததாரர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியில் ரூ.1,700 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பணியாளர்களுக்கு கடந்த நவம்பர் மாத சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் பி.கே. புர்வார் தெரிவித்தார். அதேசமயம் கடன்தாரர்களுக்கு  பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு கொடுக்க வேண்டியது உள்ளது என அவர் மேலும் கூறினார்.