ரூ.10 லட்சத்துக்கு மின்சார கார்- ஹூண்டாய் அதிரடி!

 

ரூ.10 லட்சத்துக்கு மின்சார கார்- ஹூண்டாய் அதிரடி!

இந்தியாவில் ரூ.10 லட்சத்துக்கு விற்பனைக்கு செய்யும் வகையில் மின்சார கார் தயாரிக்க ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்ய உள்ளது.

காற்று மாசுவால் லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் உயிர் இழந்து வருகின்றனர். மேலும், வாகனங்கள் வெளியிடும் புகையால் சுற்றுப்புறச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சுற்றுப்புறச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என பலரும் தற்போது வலியுறுத்தி வருகின்றனர்.

ஹூண்டாய்  கோனா

மத்திய அரசும் தற்போது மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மின்சார வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. மேலும், 150 சிசி திறனுக்கு குறைவான அனைத்து இருசக்கர, மூன்று சக்கர வாகன தயாரிப்புகளும் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என்றும், அதற்காக வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு சில ஆண்டுகள் காலஅவகாசமும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

அதேசமயம் பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. அதில் ஒன்றுதான் தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய். அந்த நிறுவனம் சமீபத்தில் கோனா எஸ்.யூ.வி. மின்சார காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.25 லட்சத்துக்கும் மேல் என்பதால் விற்பனை பெரிய அளவில் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய்

அதேசமயம் ஹூண்டாய் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில், ரூ.10 லட்சம் விலையில் மின்சார கார் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக தனது சென்னை ஆலையில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்ய உள்ளது. மேலும், சுசுகி மற்றும் டொயோட்டோ நிறுவனங்களை போன்று இந்தியாவில் மின்சார பேட்டரி ஆலையை தொடங்கவும் ஹூண்டாய் யோசனை செய்து வருகிறது. இதற்காக தகுந்த கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.