ரூ.10 நாணயங்களால் அதிகாரிகளை தெறிக்க விட்ட சூலூர் சுயேட்சை வேட்பாளர்!

 

ரூ.10 நாணயங்களால் அதிகாரிகளை தெறிக்க விட்ட சூலூர் சுயேட்சை வேட்பாளர்!

தமிழகத்தில் கடந்த 18-ம் தேதியன்று மக்களவை மற்றும் காலியாக இருந்த 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது

சூலூர்: தமிழகத்தில் விடுபட்ட நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 18-ம் தேதியன்று மக்களவை மற்றும் காலியாக இருந்த 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது.

sulur prabhakaran

முன்னதாக, தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தமிழகத்தில் ஏற்கனவே காலியாக இருக்கும் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனிடையே, சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., கனகராஜ் காலமானதால் அந்த தொகுதியும் காலியானது. எனவே, காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

sulur prabhakaran

தொடர்ந்து, தமிழகத்தில் விடுபட்ட சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மே மாதம் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் இந்த தொகுதிகளுக்கான தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

இந்த தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சூலூர் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கும் அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், டெபாசிட் தொகையான ரூ.10,000-த்தை ரூ.10 நாணயங்கள் மூலம் அவர் செலுத்தியது தான். இதனை சுமார் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக எண்ணினார்கள்.

sulur prabhakaran

வேட்புமனுத்தாக்கல் செய்வதற்காக ஏற்கனவே பொதுமக்களிடம் தலா ஒரு ரூபாய் தந்தால் கூட போதும் என பிரபாகரன் நிதியுதவி கேட்டிருந்தார். தற்போது, பொதுமக்களிடம் திரட்டப்பட்ட நிதியின் மூலம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பிரபாகரன், ஜனநாயகம், பணநாயகம் ஆகிவிட்டது. ஆனால், நான் மக்களிடமிருந்து பணம் வாங்கித்தான் தேர்தலில் போட்டியிடுகிறேன். மக்களுக்காகப் போட்டியிடுகிறேன். சூலூர் மக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவேன். ரூ.10 நாணயங்கள் எங்கும் வாங்கப்படுவதில்லை. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, அதனை உணர்த்தும் வகையில் ரூ.10 நாணயங்கள் மூலம் வேட்புமனுத் தாக்கல் செய்தேன் என்று தெரிவித்தார்.

இதையும் வாசிங்க

’அந்த ஆளு ஒரு சுயநலவாதி…’ அதிமுக தலைமைக்கெதிராக பொங்கியெழுந்த ஜெயலலிதா..!