ரூ.1.94 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 637 புள்ளிகள் உயர்ந்தது..

 

ரூ.1.94 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 637 புள்ளிகள் உயர்ந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 637 புள்ளிகள் உயர்ந்தது.

பிரதமர் மோடி நேற்று கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து பொருளாதார மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாக அறிவித்தார். அதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் பெரிய ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கியது. அதன் பிறகு படிப்படியாக இறங்க தொடங்கியது. இருப்பினும் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

ஆக்சிஸ் வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், எல் அண்டி டி, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஸ்டேட் வங்கி மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட மொத்தம் 26 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பார்தி ஏர்டெல், இந்துஸ்தான் யூனிலீவர், சன்பார்மா மற்றும் நெஸ்லே இந்தியா ஆகிய 4 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

நெஸ்லே இந்தியா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,663 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 723 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 180 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.124.68 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று மட்டும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.94 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. 

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 637.49 புள்ளிகள் உயர்ந்து 32,008.61 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 187 புள்ளிகள் ஏற்றம் கண்டு 9,383.55 புள்ளிகளில் முடிவுற்றது.