ரூ.1.61 லட்சம் கோடி கடனை அடைக்க வேகம் காட்டும் முகேஷ் அம்பானி…. விரைவில் கடன் இல்லா நிறுவனமாக மாறும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

 

ரூ.1.61 லட்சம் கோடி கடனை அடைக்க வேகம் காட்டும் முகேஷ் அம்பானி…. விரைவில் கடன் இல்லா நிறுவனமாக மாறும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரூ.1.61 லட்சம் கோடி நிகர கடனை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடைத்து விட முகேஷ் அம்பானி தீவிரம் காட்டி வருகிறார்.

நாட்டின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பெட்ரோலிய வர்த்தகம் முதல் தொலைத்தொடர்பு சேவை என பல்வேறு துறைகளில் கொடி கட்டி பறக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ.1.61 லட்சம் கோடி நிகர கடன் உள்ளது. 2021 மார்ச் மாதத்துக்குள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை கடன் இல்லா நிறுவனம் என்ற நிலையை எட்டும் என 2019 ஆகஸ்டில் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார். 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

முகேஷ் அம்பானி அதனை பேச்சோடு நிறுத்தாமல் செயலிலும் காட்ட ஆரம்பித்தார். முதலில் எனது எண்ணெய் வர்த்தக நிறுவனத்தின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை சவுதி அரோம்கோ நிறுவனத்துக்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். அரோம்கோ நிறுவனமும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியது. இருப்பினும் ஒரு சில தடைகளால் அது தாமதம் ஆகி வருகிறது. இந்த நிலையில் அண்மையில் பேஸ்புக் நிறுவனம் ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை ரூ.43,547 கோடிக்கு வாங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.53,125 கோடிக்கு உரிமை பங்கு வெளியீடு மேற்கொள்ளதாக அறிவித்துள்ளது. இவற்றின் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு நிறுவனத்தின் கடனை அடைத்து விட அம்பானி முடிவு செய்துள்ளார். 

பேஸ்புக், ஜியோ

இது தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிதி அதிகாரி ஸ்ரீ்காந்த்  வெங்கடசாரி கூறுகையில், 2020 காலண்டர் ஆண்டுக்குள் கடன் இல்லா நிறுவனம் என்ற இலக்கு எட்டப்படும். கடந்த ஆகஸ்ட் அறிவிப்பு முதல், ஜியோவின் 9.99 சதவீத பங்குகள் பேஸ்புக் நிறுவனத்துக்கு அம்பானி விற்பனை செய்தார். சவுதி அரேபியாவின் அரோம்கோ நிறுவனத்துக்கு பங்குகளை விற்பனை செய்யும் வகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பெட்ரோலிய வர்த்தகத்தை தனி நிறுவனமாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டது. மேலும் உரிமை பங்கு வெளியீட்டில் ஏதேனும் பற்றாக்குறை ஏற்பட்டால் அதனை தருவதாக உறுதி அளித்தார். வரும் ஜூன் மாதத்துக்குள்  நிறுவனத்தின் ரூ.1.04 லட்சம் கோடி மூலதனம் திரட்டும் நடவடிக்கை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.