ரூபாய் நோட்டு தடையால் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகள்! ஆய்வில் 66 சதவீத மக்கள் கருத்து

 

ரூபாய் நோட்டு தடையால் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகள்! ஆய்வில் 66 சதவீத மக்கள் கருத்து

ரூபாய் நோட்டு தடை அல்லது மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிப்பு வெளியாகி இன்றோடு 3 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ரூபாய் நோட்டு தடையால் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் 66 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருப்பு பணம், ஊழல் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுக்களை ஒழிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2016 நவம்பர் 8ம் தேதியன்று திடீரென அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. மேலும், தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து விட்டு புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுக்களை பெற்று கொள்ளலாம் என அறிவித்தது. புழக்கத்தில் இருந்த 86 சதவீத ரூபாய் நோட்டுக்களை திடீரென செல்லாது என அறிவித்ததால் மக்கள் சிரமப்பட்டனர். இருப்பினும், நாட்டின் நலன் கருதி சிரமத்தை மக்கள் தாங்கி கொண்டனர்.

ரூபாய் நோட்டு தடையால் பல எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டது. வேலை பார்த்தால்தான் காசு என்ற நிலையில் இருக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வர்த்தகர்கள்  மற்றும் நடுத்தர வர்த்தகத்தினர் என பல்வேறு தரப்பினரையும் ரூபாய் நோட்டு தடை பதம் பார்த்து விட்டது. ரூபாய் நோட்டு தடை நிகழ்ந்து 3 ஆண்டுகள் கழிந்த பிறகும் அதன் தாக்கம் மக்கள் மனதில் இன்னும் இருப்பதாக தெரிகிறது. 

லோக்கல்சர்க்கிள்ஸ் என்ற இணையதளம் ரூபாய் நோட்டு தடை தொடர்பாக மக்களிடம் ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 66 சதவீம் பேர்,  பொருளாதாரரம் மற்றும் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பில் ரூபாய் நோட்டு தடை,எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியதாக கருத்து தெரிவித்தனர். அதேசமயம் 28 சதவீதம் பேர் மட்டுமே எந்தவிதமான எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தவில்லை என தெரிவித்தனர். மேலும், ஆய்வில் பங்கு கொண்டவர்களில் 33 சதவீதம் பேர் பொருளாதார மந்தநிலைக்கு ரூபாய் நோட்டு தடைதான் காரணம் என தெரிவித்தனர்.