ரியல் எஸ்டேட் துறைக்கு பட்ஜெட்டில் கருணை காட்டுவாரா? நிர்மலா சீதாராமன்!

 

ரியல் எஸ்டேட் துறைக்கு பட்ஜெட்டில் கருணை காட்டுவாரா? நிர்மலா சீதாராமன்!

முடங்கி கிடக்கும் ரியல் துறைக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு சலுகைகளை வழங்குவார் என அத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

நம் நாட்டில் விவசாய துறைக்கு அடுத்தப்படியாக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் துறை என்றால் அது ரியல் எஸ்டேட்தான். சுமார் 5.2 கோடி பேருக்கு இந்த துறை வேலைவாய்ப்பை கொடுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரியல் துறை கொடி கட்டி பறந்தது. ஆனால் ரூபாய் மதியிழப்பு நடவடிக்கை, ரியல் எஸ்டேட் மசோதா, ஜி.எஸ்.டி. அறிமுகங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (ஆர்.இ.ஆர்.ஏ.) போன்றவை ரியல் எஸ்டேட் துறையில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தின.

ஆர்.இ.ஆர்.ஏ.

வாங்குபவர்களின் நலனை பாதுகாக்கவும், வெளிப்படைதன்மையை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட ஆர்.இ.ஆர்.ஏ.வால் சிறு டெவல்ப்பர்கள் காணாமல் போய் விட்டனர். ஆரம்பத்தில் ஜி.எஸ்.டி. பில்டர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தியது. கடந்த மார்ச்சில் ஜி.எஸ்.டி. விகிதத்தில் மாற்றம் செய்ததால் தற்போது அந்த நெருக்கடி இல்லை. மேலும், ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையால் ரியல் எஸ்டேட் துறை படுத்து விட்டது. தேவை குறைந்ததால் கையிருப்பு அதிகரித்தது. 2017ம் ஆண்டு இறுதியில் நாட்டின் டாப் 7 நகரங்களில் மட்டும் 4.40 லட்சம் வீடுகள் விற்பனை ஆகாமல் இருந்தது.

சுரத்து இல்லாமல் இருக்கும் ரியல் எஸ்டேட் துறையை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திருப்ப சில சலுகைகளை நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பார் என இத்துறையினர் கடும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இத்துறையை புத்துயிர் கொடுக்க என்ன செய்யவேண்டும் என்று என்பதை பார்ப்போம். வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் வங்கிகளை இந்த துறை நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கன்ஸ்ட்ரக்சன்
இ.சி.பி. வழிமுறையில் மூலதனம் பெற தொடர்ந்து அனுமதி, குறைந்த விலை வீட்டு வசதி திட்டத்தை மத்திய அரசு ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். ரியல் எஸ்டேட்டுக்கு முக்கிய ஆதாரம் நிலம்தான். அதனால் அதிகளவில் நிலம் கிடைப்பை உறுதி செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட் திட்ட ஒப்புதல்களுக்கு ஒற்றை சாளர முறையை உருவாக்க வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கையின் பலன் இத்துறைக்கு கிடைக்க வேண்டும். ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்ட்டுக்கு வரி சலுகைகள் வழங்க வேண்டும் இது போன்ற நடவடிக்கைகள் ரியல் எஸ்டேட் துறையில் மீண்டும் பொற்காலம் ஏற்படும்.