ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வாய்ப்பு….

 

ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வாய்ப்பு….

ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கை ஆய்வறிக்கை கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டியை 0.25 சதவீதம் குறைக்கும் என பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வறிக்கை கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். கடந்த நிதிக்கொள்கை ஆய்வறிக்கை கூட்டம் ஜூன் மாதத்தில் நடைபெற்றது. இதனையடுத்து ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக்கொள்கை கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

வட்டி குறைப்பு

மந்தகதியில் பொருளாதார நிலை மற்றும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவுக்குள் சில்லரை விலை பணவீக்கம் இருப்பதால் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை குறைந்தபட்சம் 0.25 சதவீதம் குறைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதேசமயம் முக்கிய கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி கட்டாயம்  0.50 சதவீதம் குறைக்க வேண்டும் என இந்திய தொழிலக கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

சக்திகந்த தாஸ்

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் தலைமையில் ரிசர்வ் வங்கியின் இந்த நிதியாண்டின் 3வது நிதிக்கொள்கை ஆய்வறிக்கை கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டம் நாளையும் தொடர்ந்து நடைபெறும். புதன்கிழமை காலை 11.45 மணி அளவில் நிதிக்கொள்கை ஆய்வறிக்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் ரிசர்வ் வங்கியின் வலைதளத்தில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.