ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ்

 

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ்

மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

மும்பை: மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும்  இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, பொறுப்பேற்ற உர்ஜித் படேல் தங்களுக்கு சாதகமாக இருப்பார் என பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் நினைத்தனர். ஆனால், அவரும் மத்திய அரசுக்கு எதிரான மாற்று கருத்துகளை முன் வைத்து வருகிறார்.

ரிசர்வ் வங்கி சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவதாகவும், இது பேரழிவை ஏற்படுத்தும் எனவும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா கடுமையாக விமர்சித்திருந்தார். இதன் மூலம், ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் மற்றும் விரிசல்கள் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது. எனவே, அந்த வங்கி மீது மத்திய அரசு அதிருப்தியில் உள்ளது.

வட்டி விகிதம், வாராக் கடன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசின் பரிந்துரையை ரிசர்வ் வங்கி நிராகரித்து விட்டதே இந்த போதல் போக்குக்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், அந்த நோட்டீசிற்கு வருகிற 16-ம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நோட்டீசில், கடன் ஏய்ப்பாளர்கள் பட்டியலை வெளியிடாததற்காக ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு அதிகப்பட்ச அபராதத்தை ஏன் விதிக்க கூடாது என்று கேட்கப்பட்டுள்ளது. ரூ.50 கோடி மற்றும் அதற்கும் மேற்பட்ட தொகையை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாமல் வங்கிகளை ஏமாற்றியவர்களின் பட்டியலை வெளியிடுமாறு ரிசர்வ் வங்கியை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டும், அதை ஏன்வெளியிடவில்லை எனவும் அந்த நோட்டீசில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.