ராவணன் ராகுல்…சூர்ப்பனகை பிரியங்கா…ராவணனை வீழ்த்தும் ராமர் மோடி: பாஜக எம்எல்ஏ

 

ராவணன் ராகுல்…சூர்ப்பனகை பிரியங்கா…ராவணனை வீழ்த்தும் ராமர் மோடி: பாஜக எம்எல்ஏ

காங்கிரஸ் தலைவர் ராகுலை ராவணன் என்றும், அவரது தங்கை பிரியங்காவை சூர்ப்பனகை என்றும் பாஜக எம்எல்ஏ ஒருவர் விமர்சித்துள்ளார்

லக்னோ: காங்கிரஸ் தலைவர் ராகுலை ராவணன் என்றும், அவரது தங்கை பிரியங்காவை சூர்ப்பனகை என்றும் பாஜக எம்எல்ஏ ஒருவர் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற்றவுள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் சோனியாவின் மகளும், அக்கட்சியின் தலைவர் ராகுலின் சகோதரியுமான பிரியங்கா, காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில கிழக்கு பகுதி பொது செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார். அவரது வருகை காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேந்திரா சிங், காங்கிரஸ் தலைவர் ராகுலை ராவணன் என்றும், அவரது தங்கை பிரியங்காவை சூர்ப்பனகை என்றும் விமர்சித்துள்ளார். மேலும், ராவணனை வீழ்த்தும் ராமனாக பிரதமர் மோடி உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெரும் என தெரிவித்துள்ள சுரேந்திரா சிங், காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல் எனவும் சாடியுள்ளார்.

முன்னதாக, பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெறவுள்ள காண்கிற கட்சியின் பேரணியை முன்னிட்டு, ராகுல் காந்தியை ராமர் போல் சித்தரிக்கப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது சர்ச்சையானது. அதனை ஒட்டிய காங்கிரஸ் நிர்வாகி, ராமராய் இருக்க அத்தனை தகுதிகளும் உடையவர் ராகுல் காந்தி, ராமர் பெயரை வைத்து அரசியல் செய்பவர்தான் நரேந்திர மோடி என சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.