ராயல்டி விவகாரம்: இளையராஜா மீது தயாரிப்பாளர்கள் வழக்குப்பதிவு

 

ராயல்டி விவகாரம்: இளையராஜா மீது தயாரிப்பாளர்கள் வழக்குப்பதிவு

இசையமைப்பாளர் இளையராஜா ராயல்டி கேட்பது சட்டவிரோதம் என்று தயாரிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா ராயல்டி கேட்பது சட்டவிரோதம் என்று தயாரிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தான் இசையமைத்த பாடல்களை பொது நிகழ்ச்சிகள் மற்றும் மேடைகளில் பாடுவதற்கு பாடகர்கள் தனக்கு உரிய ராயல்டி தொகையை செலுத்த வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்திருந்தார். இவ்விவகாரத்தில் தயாரிப்பாளர்களுக்கே உரிமை கோரும் உரிமை உள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், விஜய் நடித்த ‘புலி’ உட்பட சில படங்களை தயாரித்த தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில், அன்புச்செல்வன், மீராகதிரவன், மணிகண்டன் உள்ளிட்டோர் இளையராஜா மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ilaiyaraja

இது தொடர்பான அவர்களது மனுவில், ஊதியம் பெற்று பாடல்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் இளையராஜா, ராயல்டி கோருவது சட்டவிரோதமானது. ஒரு படத்தில் இசையமைப்பாளர்களின் பங்களிப்புக்கு முதல் உரிமையாளர் தயாரிப்பாளர் தான் என இந்திய காப்புரிமை சட்டத்தில் உள்ளது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக தான் இசையமைத்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் தனக்கே சொந்தம் என இளையராஜா கூறி வருகிறார்.

ptselvakumar

இசையமைப்பாளராக பணியாற்றிய இளையராஜாவுக்கு ராயல்டி கோரும் உரிமையை எந்த தயாரிப்பாளர்கள் வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்படாத நிலையில், இளையராஜா ராயல்டி கோருவது சட்டவிரோதமானது. இதை அனுமதித்தால் நடிகர்கள், நடிகையர் என அனைவரும் உரிமை கோரும் நிலை உண்டாகும். எனவே, தங்கள் படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கான காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை விதிக்கவும், ஊதியம் பெற்று அவர் இசையமைத்த பாடல்களுக்கான முழு உரிமையும் தயாரிப்பாளருக்கே சொந்தம் என அறிவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.