ராமேஸ்வரம் கோயிலில் மகாலட்சுமி தீர்த்தம் இடமாற்றம்!

 

ராமேஸ்வரம் கோயிலில் மகாலட்சுமி தீர்த்தம் இடமாற்றம்!

ராமேஸ்வரம் கோயிலில் பல நூறு வருடங்களாக பக்தர்கள் நீராடி வந்த மகாலட்சுமி தீர்த்தம் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாற்று இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் :

தமிழகத்தில் அமைந்துள்ள முதன்மையான பித்ரு தோஷ பரிகார ஸ்தலமாக விளங்குவது  ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் ஆகும்

rameswaram

இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்தத்தில் நீராடி பின்னர் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவது வழக்கம். இதன் பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர். 

முக்கிய விழாக் காலங்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமான நிலையில், போதுமான இடவசதி இல்லாத பகுதிகளில் இருந்த தீர்த்தங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வந்தது. இதனால் பக்தர்கள் 22 தீர்த்தங்களிலும் முழுமையாகத் தீர்த்தம் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

 பக்தர்கள் அனைத்து தீர்த்தங்களிலும் நீராட வசதியாகவும், கோயிலின் தூய்மைக்காகவும் நெருக்கடியான பகுதிகளில் இருந்த தீர்த்தங்களை வேறு பகுதிக்கு மாற்ற கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். 

rameswaram

கோயிலில் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து ஆய்வு செய்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழுவும் தீர்த்தங்கள் இடமாற்றத்துக்கு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து மகாலட்சுமி, காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி, சங்கு, சக்கரம் ஆகிய 6 தீர்த்தங்கள் கோயிலின் 2-ம் பிராகாரத்தில் தோண்டப்பட்டன. 

இவற்றில் மகாலட்சுமி தீர்த்தம் தவிர 5 தீர்த்தங்கள் கடந்த மாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மகாலட்சுமி தீர்த்தத்தையும் புதிய இடத்துக்கு மாற்றி அது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

rameswaram

இந்த தீர்த்த இடமாற்றத்தை கைவிடுமாறு அனைத்துக் கட்சியினரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கடந்த பலநூறு ஆண்டுகளாகக் கிழக்கு கோபுர வாயிலின் நுழைவுப் பகுதியில் இருந்து வந்த மகாலட்சுமி தீர்த்தம் இன்று காலை முறைப்படி 2-ம் பிராகாரத்தில் தோண்டப்பட்ட புதிய தீர்த்த கிணற்றுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. 

சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் கோயில் குருக்கள் மகாலட்சுமி தீர்த்தத்தை புதிய தீர்த்தத்தில் ஊற்றினார். தீர்த்த இடம் மாற்ற நிகழ்ச்சிக்காக ஏராளமான போலீஸார் கோயிலில் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.