“ராமரை நம்ப சொல்கிறீர்களா? கொரோனா மிகவும் ஆபத்தானது” – மோடியின் நம்பர் 9 தியரி பற்றி சொல்லும் சசி தரூர்!

 

“ராமரை நம்ப சொல்கிறீர்களா? கொரோனா மிகவும் ஆபத்தானது” – மோடியின் நம்பர் 9 தியரி பற்றி சொல்லும் சசி தரூர்!

பிரதமர் மோடியின் உரை குறித்து சசி தரூர் விமர்சனம் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி: பிரதமர் மோடியின் உரை குறித்து சசி தரூர் விமர்சனம் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி இன்று வீடியோ மூலம் மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சவாலுக்கு  எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி.அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். ஊரடங்கு மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி. இந்தியாவில் மக்கள் ஊரடங்கு உலக அளவில் முன்னுதாரணமாக மாறியுள்ளது. ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கை அணையுங்கள். வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி உரை பற்றி காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சசி தரூர் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “கவனித்தோம் பிரதமர் ஷோமேன். உங்கள் உரையில் எதிர்காலம் தொடர்பான எந்தத் தொலைநோக்கு திட்டங்களும் கூறப்படவில்லை. மக்களின் வேதனைகளை, சுமைகளை, பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்கும் விதமான எத்தகைய அறிவிப்பையும் உங்கள் உரையில் காணவில்லை. ஊரடங்கிற்கு பிறகு வரவிருக்கும் பிரச்சினைகளை எவ்வாறு அடையாளம் காணப் போகிறோம் என்பதற்கான எந்த தொலைநோக்கும் உங்கள் உரையில் இல்லை என்றார்.

மேலும் தன்னொரு இன்னொரு ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடியின் நம்பர் 9 தியரி குறித்து சசி தரூர் விளக்கியுள்ளார். அதில், “பிரதமர் ராம நவமி நாளில் காலை 9 மணிக்கு 9 நிமிடங்கள் பேசியுள்ளார். மேலும் ஏப்ரல் 5-ஆம் தேதி (‘ஏப்ரல்’ என்பது 4வது மாதம் + 5-ஆம் தேதி = கூட்டுத் தொகை 9)  இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கை அணைத்து விட்டு மெழுகுவர்த்தி, அகல் விளக்கை ஏற்றுமாறு மக்களிடம் தெரிவித்துள்ளார். 9 ஆம் எண்ணுடன் இந்து மதம் இணைந்திருக்கும் அனைத்து கூறுகளையும் பிரதமர் பயன்படுத்தி உள்ளார். ராமரை நம்ப சொல்கிறீர்களா? நாம் நினைப்பதை காட்டிலும் கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது” என்று கூறியுள்ளார்.