ராணுவ பைக் வேண்டுமா? – ஆசையைத் தூண்டி பல லட்சம் கொள்ளையடித்த போலி ராணுவ அதிகாரிக்கு வலை

 

ராணுவ பைக் வேண்டுமா? – ஆசையைத் தூண்டி பல லட்சம் கொள்ளையடித்த போலி ராணுவ அதிகாரிக்கு வலை

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர், ஓஎல்எக்ஸ் தளத்தில் ராணுவ பைக் ஒன்று விற்பனைக்கு உள்ளது என்ற விளம்பரத்தைப் பார்த்து பர்பிள் குமார் என்பவரைத் தொடர்புகொண்டுள்ளார். அவர், தற்போது பல்லாவரத்தில் உள்ள ராணுவப் பிரிவில் பணியாற்றி வருவதாகவும் வட இந்தியாவுக்கு இடமாற்றம் கிடைத்துள்ளதால் பொருட்களை எல்லாம் விற்றுவிட்டுச் செல்வதாகவும் கூறியுள்ளார்.

ராணுவ பைக் விற்பனைக்கு உள்ளது என்று கூறி ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்ட போலி ராணுவ அதிகாரியை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர், ஓஎல்எக்ஸ் தளத்தில் ராணுவ பைக் ஒன்று விற்பனைக்கு உள்ளது என்ற விளம்பரத்தைப் பார்த்து பர்பிள் குமார் என்பவரைத் தொடர்புகொண்டுள்ளார். அவர், தற்போது பல்லாவரத்தில் உள்ள ராணுவப் பிரிவில் பணியாற்றி வருவதாகவும் வட இந்தியாவுக்கு இடமாற்றம் கிடைத்துள்ளதால் பொருட்களை எல்லாம் விற்றுவிட்டுச் செல்வதாகவும் கூறியுள்ளார். ராணுவ பைக் என்பதால் தரமானதாக இருக்கும் என்று நம்பிய பாலமுருகன் அந்த பைக்கை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார். 
அப்போது, பர்பிள் குமார் ராணுவ உடையில் இருக்கும் படம், அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை, மதுபானம் வாங்குவதற்கான அட்டை உள்ளிட்டவற்றின் புகைப்படத்தை வாட்ஸ் ஆப் மூலம் பாலமுருகனுக்கு அளித்துள்ளார். இதை எல்லாம் பார்த்து உண்மை என்று நம்பிய பாலமுருகன் ரூ.5000த்தை முன்பணமாகக் கூகுள் பே மூலம் அனுப்பியுள்ளார்.

hacker

பர்பிள் குமார், இந்த 5000த்துக்கு ராணுவ முத்திரையுடன் கூடிய ரசீதையும் அனுப்பியுள்ளார். அடுத்த நாள் காலை எழுந்து பார்த்தபோது, பாலமுருகன் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் வேறு ஒருவர் எண்ணுக்கு மாற்றப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். யார் எண்ணுக்கு சென்றது என்று பார்த்தபோது, அது பர்பிள் குமாரின் மற்றொரு எண் என்பது தெரிந்து மேலும் அதிர்ச்சியடைந்தார் பாலமுருகன். 
நண்பரின் செல்போனில் இருந்து பர்பிள் குமாரை ஓ.எல்.எக்ஸ் மூலம் தொடர்புகொண்டபோது, முன்பு கூறியது போன்ற தகவலை அப்படியே அவருக்கும் அனுப்பினார். இதனால், ராணுவ அதிகாரி என்ற பெயரில் பர்பிள் குமார் ஏமாற்றியது உறுதியானது. இது குறித்து போலீசில் புகார் செய்தார் பாலமுருகன். அப்போது மேலும் 8 பேர் இவரிடம் ஏமாந்ததாகப் புகார் அளித்திருப்பது தெரிந்தது.
உண்மையில் பர்பிள் குமார் யார், ராணுவத்தில் பணியாற்றும் வேறு ஒருவரின் பெயரை பயன்படுத்தி ஏமாற்று வேலை நடக்கிறதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற மோசடிகள் தொடர்ந்து பல பகுதிகளில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ராணுவ வாகனத்தை எல்லாம் பொது மக்கள் பயன்படுத்த முடியாது. எனவே, பொது மக்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முன்பின் தெரியாத நபர்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம். இதுபோன்ற அறிமுகம் இல்லாத பாதுகாப்பற்ற தளங்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருப்பது நல்லது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.