‘ராஜீவ் படுகொலைக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ – விடுதலைப் புலிகள் அறிக்கையால் பரபரப்பு

 

‘ராஜீவ் படுகொலைக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ – விடுதலைப் புலிகள் அறிக்கையால் பரபரப்பு

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம்: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விடுதலைப்புலிகள் சட்டத்துறை பிரதிநிதி லதன் சுந்தரலிங்கம், அரசியல் துறை பிரதிநிதி குருபரன் குருசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழீழ மக்களுக்காக, தமிழீழ மக்களால், தமிழீழ மக்களின் பாதுகாப்பிற்காக தோன்றிய இயக்கம். நாங்கள் போராட்டக்குழுவோ, ஆயுதக்குழுவோ, வன்முறை இயக்கமோ அல்ல. மாறாக தமிழீழத்தில் நடந்த அரச வன்முறைகளையும், அரசு ஆதரவு ஆயுதக் குழுக்கள் வன்முறைகளையும் கட்டுப்படுத்தும் இயக்கமாகவே இருந்துள்ளோம்.

எங்கள் ஆயுத மௌனிப்பிற்குப் பிறகும், இதுவரை எங்கள் கட்டுப்பாடுகளைக் காத்துவந்துள்ளோம். எனினும், எங்கள் மக்களுக்கு இதுவரை எந்த விடிவோ, தீர்வோ கிடைக்கவில்லை. இன்றளவும் எம்மக்கள் திட்டமிட்ட இனவழிப்பிற்கே உட்படுத்தப்படுகிறார்கள். புலிகள் இல்லையென்றால் இவர்கள் பேசித் தீர்த்துக் கொள்வார்கள்என்று அறிவுரை கூறியவர்களெல்லாம் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

பலமுறை தன்னிலை விளக்கம் அளித்தும், ஆதாரங்கள் பலவற்றை எடுத்து விளம்பியும் மீண்டும் மீண்டும் புலிகள்தான் ராஜீவ் காந்தியை கொன்றார்கள் என்ற ஆதாரமில்லாத தவறான கருத்து தொடர்ந்து திணிக்கப்பட்டு வருகிறது. தொடர்கின்ற இது போன்ற தவறான பிரச்சாரத்தால் எம்மக்கள் கையறுநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

soniya

சிலர், ஒருபடி மேலே சென்று முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களின் உயிர் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஈடாகாது என்றுரைப்பது எவ்வளவு வேதனை தரும் விடயம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியத் தலைமையைச் சீர்குலைக்கும் திட்டமோ,இந்தியாவைத் தாக்கும் திட்டமோ என்றுமே புலிகளிடம் இருந்ததில்லை. இலங்கையைச் சாராத எந்தவொரு நபருக்கோ,தலைவருக்கோ எதிராக நாங்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தவுமில்லை,திட்டம் தீட்டவுமில்லை. குறிப்பாக எந்தவொரு இந்தியத் தேசியத் தலைவருக்கும் எதிராகச் செயற்பட நாங்கள் எப்பொழுதும் எண்ணியதில்லை.

எங்கள் ஆயுத மௌனிப்பின் 10 வருடங்களுக்குப் பிறகும் கூட புலிகளையும் தமிழீழ மக்களையும் ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்பு படுத்துவதைக் காணும் பொழுது, இந்த கொலை தமிழீழ மக்களை அழிக்கச் செய்யப்பட்ட சதித் திட்டமாகத்தான் தோன்றுகிறது.

தொடர்ந்து அழிந்து கொண்டிருக்கும் எம் மக்கள் மீது இது போன்ற அபாண்டமான குற்றச்சாட்டுக்களை இனியும் பதிய வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ராஜீவ் காந்தி படுகொலைக்கும் எமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என முன்பே பலமுறை விடுதலைப் புலிகள் இயக்கம் கூறி இருக்கிறது.

ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்து சில நாட்களுக்குள் (1991) விடுதலைப் புலிகளின் வெளியுறவுப் பொறுப்பாளராக இருந்த கிட்டு இப்படுகொலைக்கும் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லைஎன அறிக்கை வெளியிட்டார். இவ்வறிக்கை அப்போது இந்திய நாளேடுகளில் வெளியானது.

கொழும்பில் பி.பி.சி. (B.B.C.) நிருபராக இருந்த கிரீஸ் மோரீஸ் (CHRIS MORRIS) யாழ்ப்பாணத்தில் 1991 செப்டம்பர் 1 இல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களை நேர்காணல் கண்டபோதுராஜீவ் காந்தி படுகொலையில் எமது இயக்கத்துக்கு எந்த தொடர்பும் இல்லை “Our movement is not in any way involved in the killing of Mr. Rajiv Gandhi’ எனத் தெளிவாகக் கூறினார் பிரபாகரன்.

rajiv burial

10 ஏப்ரல் 2002இல் தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் ஏற்பாடு செய்திருந்த உலக இதழியலாளர் சந்திப்பு ஒன்றில் ராஜீவ் காந்தி படுகொலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ எனக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அது ஒரு துன்பியல்’ (‘It was a tragedy’) என்று பிரபாகரன் பதிலளித்தார்.

தமிழீழ மக்களின் விடுதலைப் போரை உன்னிப்பாகக் கவனித்துவந்த இந்திய அரசு, 1980களின் தொடக்கத்தில் தமிழீழ மக்களின் உறுதிமிக்க ஒரே கொள்கை இறையாண்மை கொண்ட தமிழீழ அரசே என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட பின்புதான் எமது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து சிங்கள இனவாதச் ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான போரில் எமக்குப் பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கியது.

1983இல் இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர்மாண்புமிகு இந்திரா காந்தி அம்மையார், ‘இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலையேஎன இந்திய அரசின் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார். இனப்படுகொலைக்குத் தீர்வு விடுதலையே என்பதை புரிந்தவராக அப்போது இந்திரா காந்தி அம்மையார் இருந்தார் என்பதையே அவரின் நாடாளுமன்ற உரை தெளிவுபடுத்துகிறது.

prabakaran

இந்தியப் பிரதமர் மாண்புமிகு இந்திரா காந்தி அம்மையார் மறைவிற்குப் பின்பும்,அவரது புதல்வரான இந்திய முன்னாள் பிரதமர் மாண்புமிகு ராஜீவ் காந்தி அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இரகசிய உறவைப் பேணிவந்துள்ளார் என்பதையும் இவ்வேளையில் நினைவூட்ட விரும்புகிறோம்.

இந்திய அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்ள உறவை தகர்த்தெறியும் உள்நோக்கோடு ஸ்ரீலங்கா அரசும், அந்நிய சக்திகளும் இணைந்து மேற்கொண்ட சூழ்ச்சியின் விளைவே முன்னாள் இந்தியப் பிரதமர் மாண்புமிகு ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலையென உறுதியாகக் கருதுகிறோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்படும் அபாண்டமான ராஜீவ் காந்தி படுகொலை பழி உடனடியாகத் துடைத்தெறியப்பட வேண்டும் என்றும், புலிகள் மீதான களங்கம் நீங்குமானால் உலக நாடுகள் புலிகள் மீது விதித்துள்ள தடைகள் நீங்கும் என்றும், எமது மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் காலம் கனியும் என்றும் நம்புகிறோம்.புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்‘. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.