ராஜீவ் கொலை வழக்கு; 7 பேரின் விடுதலை தமிழக அரசு முடிவெடுக்கலாம்-உச்ச நீதிமன்றம் அதிரடி

 

ராஜீவ் கொலை வழக்கு; 7 பேரின் விடுதலை தமிழக அரசு முடிவெடுக்கலாம்-உச்ச நீதிமன்றம் அதிரடி

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ம் தேதியன்று, சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 49 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக குற்றம் நிரூபிக்கப்பட்டு பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல், அவர்களது விடுதலை குறித்தும் தமிழக அரசு முடிவெடுக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, ராஜீவ் கொலை வழக்கில் சுமார் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கு தொடர்ந்தது. இதனால், இவர்களது விடுதலையில் இழுபறி நிலவி வந்தது.

இந்நிலையில், ஏழு பேரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு தொடந்த இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம். அவர்களது விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அனைத்து அதிகாரமும் தமிழக அரசுக்கு உள்ளது என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.