ராஜீவ் கொலை வழக்கு: சுதந்திர காற்றை சுவாசிக்க இருக்கின்றனர் பேரறிவாளன் உட்பட 7 பேர்

 

ராஜீவ் கொலை வழக்கு: சுதந்திர காற்றை சுவாசிக்க இருக்கின்றனர் பேரறிவாளன் உட்பட 7 பேர்

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 வருடங்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ம் தேதியன்று, சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 49 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல், அவர்களது விடுதலை குறித்தும் தமிழக அரசு முடிவெடுக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, ராஜீவ் கொலை வழக்கில் சுமார் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றினார்.

ஆனால் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இதனால், இவர்களது விடுதலையில் இழுபறி நிலவி வந்தது. இதற்கிடையே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை நானும், எனது குடும்பத்தினரும் மன்னித்த்து விட்டதாக ராகுல் காந்தி  கூறியிருந்தார்

இந்நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என கடந்த 6-ம் தேதி அதிரடி உத்தரவிட்டது. 

இதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். தொடர்ந்து 7 பேரின்  விடுதலை குறித்து ஆலோசிப்பதற்காக இன்று அவசர அமைச்சரவை கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நடத்தப்பட்ட தீவிர ஆலோசனையில், ராஜீ வ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேரையும் பிரிவு 161-ன் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரை செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் இந்த முடிவு அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

 

#perarivalan #rajivgandhi #rajivgandhimurdererrs