ராஜஸ்தானுக்கு வேலைக்கு அழைத்துச் சென்ற தொழிலாளி குடும்பத்தை ஏமாற்றிய கொடுமை!

 

ராஜஸ்தானுக்கு வேலைக்கு அழைத்துச் சென்ற தொழிலாளி குடும்பத்தை ஏமாற்றிய கொடுமை!

நாகராஜ் மட்டும் ஊர் திரும்பவில்லை. சம்பத்திடம் கேட்டதற்கு, நாகராஜ் ரயிலில் வருவதாகவும் ஒரு வாரத்திற்கு வந்துவிடுவார் என்றும், கைச்செலவுக்கு 5,000 ரூபாய் மட்டும் சண்முகத்திடம் கொடுத்து அனுப்பியிருக்கிறார். நாகராஜ் ஒரு வாரத்தில் திரும்பிவிடுவார் என சொல்லி 7 மாதமாகியும் இன்னும் நாகராஜ் வீடு திரும்பவில்லை.

ஈரோடு மாவட்டம், கோபிக்கு அருகே  குப்பாண்டம்பாளையத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் நாகராஜ். உள்ளூரில் விவசாய கூலிவேலை சரிவர கிடைக்காததால், ராஜஸ்தானுக்கு போர்வெல் வேலைக்கு ஆட்கள் தேவை என வெள்ளாளப்பாளையத்தைச் சேர்ந்த சம்பத் என்பவர் கேட்டுக்கொண்டதன்பேரில், ராஜஸ்தானுக்கு கிளம்பியிருக்கிறார் நாகராஜ். 2018 செப்டம்பரில் ராஜஸ்தானுக்கு சென்றதில் இருந்து நாகராஜை சரிவர தொடர்புகொள்ள முடியாமல் இருந்திருக்கிறது. கடைசியாக 2019 பிப்ரவரியில் தந்தை சண்முகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டிருக்கிறார் நாகராஜ். அப்போது போர்வெல் உரிமையாளரான சம்பத் முறையாக சம்பளம் கொடுக்காமல் இழுத்தடிப்பதாகவும், எப்படியாவது சம்பளத்தை வாங்கிக்கொண்டு ஊருக்கு திரும்பிவிடுவதாகவும் சொல்லியிருக்கிறார். 
 

Shanmugam with his petition to Collector

அதன்பின், சம்பத்தும் சண்முகத்திடம் பேசி சமாதானப்படுத்தி, ஒரு வாரத்தில் ஊர் திரும்ப இருப்பதாகவும், வந்தவுடன் பணத்தை செட்டில் செய்வதாகவும் சொல்லியிருக்கிறார். ஒருவாரம் கழித்து ராஜஸ்தானிலிருந்து சம்பத் திரும்பிவிட்டார். போர்வெல் லாரியும் திரும்பிவிட்டது. போர்வெல் பணிக்குப் போன அத்தனை பேரும் திரும்பிவிட்டார்கள். ஆனால் நாகராஜ் மட்டும் ஊர் திரும்பவில்லை. சம்பத்திடம் கேட்டதற்கு, நாகராஜ் ரயிலில் வருவதாகவும் ஒரு வாரத்திற்கு வந்துவிடுவார் என்றும், கைச்செலவுக்கு 5,000 ரூபாய் மட்டும் சண்முகத்திடம் கொடுத்து அனுப்பியிருக்கிறார். நாகராஜ் ஒரு வாரத்தில் திரும்பிவிடுவார் என சொல்லி 7 மாதமாகியும் இன்னும் நாகராஜ் வீடு திரும்பவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் சொன்ன சம்பத் இறுதியாக, நாகராஜை காணோம் என ராஜஸ்தான் போலீஸில் புகார் கொடுத்திருப்பதாகவும், ஊரெல்லாம் நாகராஜின் போஸ்டர் ஒட்டி அவர்கள் தேடுவதாகவும், முடிந்தால் நீங்களும் தேடுங்கள் என அலட்சியமாக பதில் சொல்லியிருக்கிறார். தன் மகனுக்கு ஏதேனும் ஆகியிருக்ககூடும் என்ற கவலையோடு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு காத்திருக்கிறார் சண்முகம்.