ராஜபாதையில் வீரநடை போடும் ராணுவ வீரர்கள்; லான்ஸ் நாயக் நசீர் அமகது வாணிக்கு அசோக் சக்ரா விருது

 

ராஜபாதையில் வீரநடை போடும் ராணுவ வீரர்கள்; லான்ஸ் நாயக் நசீர் அமகது வாணிக்கு அசோக் சக்ரா விருது

வீரமரணம் அடைந்த காஷ்மீர் ராணுவ வீரர் லான்ஸ் நாயக் நசீர் அமகது வாணிக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது

புதுதில்லி: வீரமரணம் அடைந்த காஷ்மீர் ராணுவ வீரர் லான்ஸ் நாயக் நசீர் அமகது வாணிக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் 70-வது குடியரசு தினவிழா இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவையொட்டி தலைநகர் தில்லி விழாக் கோலம் பூண்டுள்ளது. தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போஸா குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜபாதையில் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

முன்னதாக, அமர் ஜவான் ஜோதிக்கு வருகை புரிந்த பிரதமர் மோடி, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், விழா நடைபெறும் ராஜபாதைக்கு சென்றார்.

இதையடுத்து, ராஜபாதை வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி வரவேற்று விழா மேடைக்கு அழைத்து சென்றார். பின்னர், மூவர்ணக் கொடியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றினார். 21 குண்டுகள் முழங்க தேசிய கொடி ஏற்றப்பட்டது. பின்னர், வீரமரணம் அடைந்த காஷ்மீர் ராணுவ வீரர் லான்ஸ் நாயக் நசீர் அமகது வாணிக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. குடியரசு தின விழாவில் நசீர் வானியின் மனைவி மற்றும் தாயிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, ராஜபாதையில் முப்படைகளின் வலிமை, இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரம்மாண்ட அணி வகுப்பு நடைபெற்று வருகிறது. முப்படைகளின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் ராஜபாதையில் கம்பீரமாக அணி வகுத்துச் செல்வது, பார்பவர்களை பூரிப்படைய செய்து வருகிறது. பார்வையாளர்களை பிரமிப்படைய செய்யும் மாநிலங்களின் கண்கவர் அலங்கார ஊர்திகள், சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்சிகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், விவிஐ-பிகள், வெளிநாட்டினர் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டு களித்து வருகின்றனர்.