“ராகுலை பிரதமராக ஏற்க மாட்டோம் என யாரும் கூறவில்லை” – ஸ்டாலின் காட்டம்

 

“ராகுலை பிரதமராக ஏற்க மாட்டோம் என யாரும் கூறவில்லை” – ஸ்டாலின் காட்டம்

ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க மாட்டோம் என எந்த தலைவரும் கூறவில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்: ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க மாட்டோம் என எந்த தலைவரும் கூறவில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில், சோனியா, ராகுல், சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன் உள்ளிட்ட தேசிய தலைவர்களை வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

ஆனால், மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் போன்ற வடநாட்டு தலைவர்கள், தேர்தலுக்கு முன்னரே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என கூறி ஸ்டாலினின் அறிவிப்பை நிராகரித்தனர்.

mk stalin

இதனால், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் கருத்து மோதல்கள் ஏற்பட்டிருப்பதாகவும், தேர்தல் வரை கூட்டணி தொடர வாய்ப்பில்லை என்றும் பத்திரிகைகள் எழுதத் தொடங்கியுள்ளன. 

இந்நிலையில், விழுப்புரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் இன்று பேசிய ஸ்டாலின், “கஜா புயலால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை இதுவரை பிரதமர் மோடி வந்து பார்க்கவில்லை. இதுவே மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களில் நடந்திருந்தால் உடனே வருத்தம் தெரிவிக்கிறார், அனுதாபம் தெரிவிக்கிறார். ஏன் வெளிநாடுகளில் அசம்பாவிதம் நடந்தால் கூட அனுதாபம் தெரிவித்து செய்தி வெளியிடுகிறார். ஆனால், தமிழ்நாட்டில் விவசாயம் அழிந்து வருகிறது. கஜா புயல் 8 மாவட்டங்களை பெருமளவில் சூறையாடி உள்ளது. இதற்கு பிரதமர் வருத்தம் தெரிவிக்கவில்லை.

stalin speech

நாட்டில் மாற்றம் தேவை என கருதி ராகுலை பிரதமராக முன்மொழிந்தேன். அதில் என்ன தவறு? கலைஞர் இந்திராகாந்தியை அழைத்து நிலையான ஆட்சி தரவேண்டும் என்றார். அதன் பின்னர் சோனியாகாந்தியை அழைத்து நல்லாட்சி தரவேண்டும் என்றார். அதன் வரிசையிலேயே தற்போது நான் ராகுலை அழைத்து நல்லாட்சி தர வேண்டும் என்று முன்மொழிந்துள்ளேன். நான் ராகுலை முன்மொழிந்தது தவறு என்று யாரும் கூறவில்லை. மோடிக்கு எதிராக நல்லகூட்டணி அமைத்த பின்பு அறிவிக்கலாம் என்று இருந்தனர். தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே பாஜக வாசனை இருக்கக் கூடாது என்று நான் கருதியதால் தான் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தேன்” என பேசினார்.

மேலும்,  தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் 12 பேர் தலையிலும், மார்பிலும் சுடப்பட்டிருப்பது, பிரேத பரிசோதனை அறிக்கையின்மூலம் தெரியவந்திருப்பதாகவும், பின்னால் இருந்து குறிபார்த்து சுடப்பட்டிருப்பதாகவும் ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.