ரயில் நிலையங்களில் இலவச வை-பை வசதி திட்டம் மெகா ஹிட்! ஒரே மாதத்தில் 2 கோடி பேர் பலன்!

 

ரயில் நிலையங்களில் இலவச வை-பை வசதி திட்டம் மெகா ஹிட்! ஒரே மாதத்தில் 2 கோடி பேர் பலன்!

ரயில் நிலையங்களில் இலவச வை-பை வசதி வழங்கும் இந்திய ரயில்வேயின் திட்டம் மெகா ஹிட்டாகியுள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் வை-பை வசதியை ரயில் நிலையங்களில் 2 கோடி பேருக்கு மேல் பயன்படுத்தியதாக தகவல்.

செல்போனும், இன்டர்நெட்டும் மனிதர்களின் வாழ்க்கை மற்றும் பழக்கவழக்கத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. ஒரு மணி நேரம் கூட செல்போன் மற்றும் இன்டர்நெட் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டு விட்டான். இப்போது அலுவலக நடைமுறைகள் அனைத்தும் டிஜிட்டல்மயமாகி வருகிறது. அதனால் இன்டர்நெட் சேவை கட்டாய தேவையாக மாறி விட்டது. 

ரயில் நிலையம்

இந்தியன் ரயில்வே பயணிகளுக்கு உயர்ந்த சேவை வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரயில் பயணிகளுக்கும் இன்டர்நெட் சேவை கிடைக்க வேண்டும் நோக்கில் ரயில் நிலையங்களில் இலவச அதிவேக வை-பை வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகம் செய்தது. 2016ல் முதன் முதலில் மும்பை மத்திய ரயில் நிலையத்தில் இந்த வசதியை அறிமுகம் செய்தது. அடுத்த 16 மாதங்களுக்குள் நாடு முழுவதுமாக டெல்லி, கொல்கத்தா, சென்னை உள்பட 1,606 ரயில் நிலையங்களில் வை-பை வசதியை கொண்டு வந்தது.

இந்திய ரயில்வேயின் இலவச வை-பை திட்டம் ரயில் பயணிகளிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் ரயில்டெல்-ன் ரயில்வயர் வை-பை வசதியை 2 கோடி பயணிகளுக்கு மேல் லாக் இன் செய்து பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக, மும்பை, டெல்லி, கொல்கத்தா ரயில் நிலையங்களில் அதிகம் பேர் இந்த சேவைய பயன்படுத்தி உள்ளனர்.

ரயில் நிலையம்

இந்த நிலையில், எஞ்சியுள்ள 4,791 ரயில் நிலையங்களிலும் இலவச வை-பை வசதி ஏற்படுத்தப்படும்  என் ரயில் டெல் நிறுவனம் அண்மையில் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து ரயில் நிலையங்களில் இலவச வை-பை வசதியை அனைத்து ரயில் பயணிகளும் பெற வாய்ப்புள்ளது.