ரஃபேல் விவகாரம்; விலை நிர்ணய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

ரஃபேல் விவகாரம்; விலை நிர்ணய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ரஃபேல் போர் விமானத்தின் விலை நிர்ணய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: ரஃபேல் போர் விமானத்தின் விலை நிர்ணய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு பாஜக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கடந்த 2012ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரஃபேல் போர் விமானம் ஒன்றை ரூ.560 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது. ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ.1,600 கோடிக்கு வாங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. 

இதனையடுத்து  ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு கடந்த 10-ம் தேதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். 

இருப்பினும், கொள்கை ஆவணத்தை மத்திய தாக்கல் செய்ய வேண்டும் என்றும், விவரங்களை அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் கேட்பதால் இதனை உத்தரவாகக் கருத வேண்டாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், விமானத்தின் விலை, தொழில்நுட்ப விவரங்களை தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர். இதற்கிடையே ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான கொள்கை ஆவணத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்நிலையில், ரஃபேல் போர் விமானம் விலை நிர்ணயம் தொடர்பான ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் 10 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.