ரஃபேல் விவகாரம்: நிர்மலா சீதாராமன் மீது இந்து என்.ராம் குற்றச்சாட்டு

 

ரஃபேல் விவகாரம்: நிர்மலா சீதாராமன் மீது இந்து என்.ராம் குற்றச்சாட்டு

ரஃபேல் விவகாரத்தில் பிரச்னையை சரிகட்ட மத்திய அரசு முயற்சிப்பதாக இந்து குழும தலைவர் என்.ராம் குற்றம் சாட்டியுள்ளார்

புதுதில்லி: ரஃபேல் விவகாரத்தில் பிரச்னையை சரிகட்ட மத்திய அரசு முயற்சிப்பதாக இந்து குழும தலைவர் என்.ராம் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனமும் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பு பணியை மேற்கொள்கிறது.

ஆனால், பிரான்ஸ் – இந்தியா இடையேயான ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் தொடர் குற்றச் சாட்டுகளை கூறி வருகிறார்.

ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் பாஜக பல உண்மைகளை மறைப்பதாகவும், பிரதமரின் தொழிலதிபர் நண்பர் ஆதாயம் பெறுவதற்காக முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் அனில் அம்பானியை மறைமுகமாக குறிப்பிட்டு ராகுல் குற்றம் சாட்டியிருந்தார்.  எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு அதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு விளக்கங்களை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியும், பாதுகாப்புத்துறை நிர்மலா சீதாராமனும் முன் வைத்து வருகின்றனர்.

ஆனால், எந்த விளக்கத்தையும் தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான அனைத்தையும் வெளியிடும் படி நாடாளுமன்ற கூட்டு குழுவை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், ரஃபேல் விவகாரத்தில் பிரச்னையை சரிகட்ட மத்திய அரசு முயற்சிப்பதாக இந்து குழும தலைவர் என்.ராம் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நிர்மலா சீதாராமனிடம் இருந்து எந்த விளக்கமும் தேவையில்லை. தற்போது அவர்கள் பெரிய பிரச்னையில் உள்ளதால், அதனை மறைக்க பார்க்கிறார்கள். நிர்மலா சீதாராமனுக்கு என்னுடைய ஒரே ஆலோசனை என்னவென்றால், ரஃபேல் ஒப்பந்தத்தில் ஈடுபடாத நீங்கள், சமாதானம் செய்யும் பெருஞ்சுமையை ஏன் சுமக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.